×

40 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்டதால் மணலி பகுதியில் அடிக்கடி குழாய் உடைந்து வீணாகும் குடிதண்ணீர்: சீரமைக்க மக்கள் கோரிக்கை

மாதவரம்: சென்னை புழல் ஏரி பூஸ்டரில் இருந்து ராட்சத குழாய் மூலம் குடிநீர் கொண்டு வரப்பட்டு திருவொற்றியூர், மணலி மற்றும் மாதவரம் பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மாதவரம் பால்பண்ணை சாலையில் உள்ள கால்நடை பல்கலைக்கழக வளாகம் அருகே பூமியில் புதைக்கப்பட்டுள்ள ராட்சத குழாய் உடைந்து அதில் இருந்து குடிநீர் வெளியேறியது. இதுபற்றி அப்பகுதி மக்கள், குடிநீர் வழங்கல் பூஸ்டர் பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து மாதவரத்தில் உள்ள பிரதான குடிநீர் குழாய் வால்வுகளை அதிகாரிகள் மூடி தண்ணீர் வெளியேறுவதை தடுத்துள்ளனர். இருப்பினும் பல்லாயிரம் லிட்டர் குடிநீர் வெளியேறி சாலையில் பெருக்கெடுத்து ஓடி வீணானது. இதையடுத்து குடிநீர் பிரிவு ஊழியர்கள் வந்து உடைப்பு ஏற்பட்ட இடத்தில் பள்ளம்தோண்டி பழுதான குழாயை சரிப்படுத்தினர்.

சமூக ஆர்வலர் கூறுகையில், ‘’ராட்சத குடிநீர் குழாய்கள் 40 ஆண்டுகள் பழமையானது. இதனால் அடிக்கடி குழாயில் பழுது ஏற்பட்டு குடிநீர் வீணாகிறது. குழாயை புதுப்பிக்க குடிநீர் விநியோக அதிகாரிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திட்டமிட்டனர். பல்வேறு காரணங்களால் செயல்படுத்த முடியாமல் காலதாமாவதால் அடிக்கடி குழாய்களில் உடைப்பு ஏற்படுகிறது. எனவே பழுதடைந்த குடிநீர் குழாய்களை புதுப்பித்து குடிநீரை வீணாகாமல் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும். தற்போது குடிநீர் குழாய் பாதுபார்க்க பள்ளம் தோண்டப்பட்ட இடத்தில் உடனடியாக மீண்டும் சாலை அமைக்கவேண்டும்’ என்றனர்.

Tags : Madhavaram ,Chennai ,Bugal Lake Booster ,Thiruvotiyur ,Manali ,University ,Madhavaram Dairy Road ,
× RELATED அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து...