×

காஞ்சிபுரம் மாவட்டம் சிப்காட் தொழிற்பூங்காவில் ரூ.300 கோடி முதலீட்டில் கார் உதிரிபாகம் உற்பத்தி நிலையம்: முதல்வர் விஜய் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் சிப்காட் தொழிற்பூங்காவில் ரூ.300 கோடி முதலீட்டில் கார் உதிரிபாகம் உற்பத்தி நிலையம் அமைக்க முதல்வர் விஜய் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. இதன்மூலம் 1,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ‘சப்’ மற்றும் ஜெர்மனியை சேர்ந்த ‘நார்டெக்ஸ்’ ஆகிய இரண்டு முன்னணி உலகளாவிய நிறுவனங்கள், தமிழ்நாட்டின் சென்னையில் தங்கள் மையங்களை முதன்முறையாக அமைக்கவுள்ளன. ‘சப்’ நிறுவனம் அமைக்கவுள்ள உலகளாவிய திறன் மையம் 220 பேருக்கும், ‘நார்டெக்ஸ்’ நிறுவனம் அமைக்கவுள்ள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் 1,000 பேருக்கும் வேலைவாய்ப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரண்டு நிறுவனங்களாலும் மொத்தம் 1,220 நல்ல ஊதியம் தரும் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவுள்ளன.
இந்த முதலீடுகள், உயர்மதிப்புடைய உலகளாவிய திறன் மையங்கள் மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்கான முக்கிய சர்வதேச மையமாக சென்னை மாநகரின் நிலையை மேலும் வலுப்படுத்தும். புத்தாக்கத்தை அடிப்படையாக கொண்ட தொழில் வளர்ச்சியை ஊக்குவித்தல், அறிவுசார் மற்றும் திறன் சார்ந்த முதலீடுகளை ஈர்த்தல் மற்றும் திறன்மிக்க மனிதவளத்திற்கு உயர்தர வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் போன்ற தமிழக அரசின் தொலைநோக்கு திட்டத்திற்கு ஏற்றாற்போல், இம்முதலீடுகள் அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும், உயர்கல்வி துறையில், ஆஸ்திரேலியாவின் முன்னணி ஆராய்ச்சி சார்ந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றான மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம் (University of Western Australia – UWA), பல்கலைக்கழக மானியக் குழுவின் 2023ம் ஆண்டின் ஒழுங்குமுறைகளின் கீழ், இந்தியாவில் தனது வளாகத்தை சென்னை நகரில் நிறுவ உள்ளது. இது தமிழ்நாட்டில் அமையவுள்ள முதல் சர்வதேச பல்கலைக்கழக வளாகமாகும். சென்னை வேளச்சேரியில் சுமார் 50,000 சதுர அடி பரப்பளவில் அமையவுள்ள இந்த வளாகம், சுமார் ரூ.125 கோடி முதலீட்டில் உருவாக்கப்பட உள்ளது. இதன்மூலம் 200க்கும் மேற்பட்டோருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா கடந்த ஜூன் 2026ல் தென் கொரியாவிற்கு மேற்கொண்ட பயணத்தின் தொடர்ச்சியாக, அந்நாட்டின் முன்னணி வாகன உதிரிபாக உற்பத்தி நிறுவனமான மோட்டிவ்லிங்க், காஞ்சிபுரம் மாவட்டம் சிப்காட் பிள்ளைப்பாக்கம் தொழிற்பூங்காவில் ரூ.300 கோடி முதலீட்டில் உற்பத்தி நிலையம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று முதல்வர் விஜய் முன்னிலையில் கையெழுத்திட்டுள்ளது. இதன்மூலம் 1,500 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும்.

இந்த முதலீடுகள், தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதோடு, உலகளாவிய திறன் மையங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உயர்கல்வி மற்றும் மேம்பட்ட உற்பத்தி துறைகளுக்கான உலகளாவிய மையமாக தமிழ்நாட்டை நிலைநிறுத்துவதில் முக்கிய பங்காற்றும். மேலும், இந்நிறுவனங்களின் முதலீடுகளை எளிதாக்குவதற்கும், அவற்றின் செயல்பாடுகள் தமிழ்நாட்டில் வெற்றிகரமாக அமைய தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் தமிழக அரசு தொடர்ந்து வழங்கும் என்றும் முதல்வர் உறுதியளித்துள்ளார்.

Tags : CIPHKAT INDUSTRIPUNGA, KANCHIPURAM DISTRICT ,VIJAY ,Chennai ,Ciphkot Industries, Kanchipuram district ,Switzerland ,Germany ,
× RELATED 4.8 கி.மீ தூரத்திற்கு பிரமாண்டமாக உருவாக போகும் ‘கேட்வே ஆஃப் சென்னை’.!!