அசாதாரண சூழல் தவிர மற்ற நேரங்களில் பெல்லட் குண்டுகளை பயன்படுத்த கூடாது: டெல்லி போராட்டம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி

புதுடெல்லி: அசாதாரண சூழல் தவிர மற்ற நேரங்களில் பெல்லட் குண்டுகளை பயன்படுத்த கூடாது என்று டெல்லி போராட்டம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக கரப்பான் பூச்சி இயக்கத்தின் சார்பாக மாணவர்கள் தரப்பில் டெல்லியில் போராட்டம் நடத்தப்பட்டது. அதனை கட்டுப்படுத்தும் விதமாக மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் விரட்டினர். மேலும் ரப்பர் குண்டு துப்பாக்கியால் சுட்டு, மாணவர்களை கலைத்தனர். இதற்கு அனைத்து தரப்பில் இருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்தது. இதைத்தொடர்ந்து ஒன்றிய கல்வி அமைச்சர் பதவியை தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தார்.

இதையடுத்து மாணவர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இருப்பினும் டெல்லி போராட்டத்தில் மாணவர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில் காவல்துறை வரம்பு மீறிய செயல்களை நியாயப்படுத்த முடியாது என்று உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் போராட்டங்களின் போது பெல்லட் குண்டுகளை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவானது தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது பிறப்பித்த உத்தரவில், “டெல்லி மாணவர்கள் போரட்டத்தில் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்க வேண்டும். பெல்லட் குண்டுகளை முக்கியமான அசாதாரண சூழல்களை தவிர, மற்ற நேரங்களில் கண்டிப்பாக பயன்படுத்த கூடாது. குறிப்பாக டெல்லி போராட்டத்தின்போது மாணவர்கள் மீது எந்தவிதமான ஆயுதம் பயன்படுத்தப்பட்டது என்பது குறித்து காவல்துறை விளக்கமளிக்க வேண்டும். மேலும் அந்த ஆயுதங்களை பாதுகாத்து வைக்க வேண்டும். இதில் பெல்லட் குண்டுகள் பயன்படுத்தப்பட்ட விவகாரத்தை நாங்கள் விரிவாக விசாரணை நடத்த தயாராக இருக்கிறோம்’ என திட்டவட்டமாக கூறி விசாரணையை ஒத்திவைத்தனர்.

Related Stories: