காமன்வெல்த் விளையாட்டு போட்டியின் ஆண்கள் 10,000 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இந்திய வீரர் குல்வீர் சிங் வெள்ளிப் பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தார். கிளாஸ்கோ தொடரின் தடகளத்தில் மிகுந்த எதிர்பார்ப்புக்கும், கனமழைக்கும் இடையே களமிறங்கிய குல்வீர், மிக சவாலான சூழ்நிலையை சமாளித்து 27 நிமிடம், 49.78 விநாடியில் பந்தய தூரத்தைக் கடந்து 2வது இடம் பிடித்தார்.
காமன்வெல்த் ஆண்கள் 10,000 மீ. ஓட்டத்தில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை குல்வீர் தட்டிச் சென்றார். ஆஸ்திரேலியாவின் கை ராபின்சன் (27:48.93 விநாடி) தங்கப் பதக்கமும், ஐஸில் ஆப் மேன் வீரர் டேவிட் முல்லார்கி (27:50.28) வெண்கலமும் வென்றனர். ஆப்ரிக்க தடகள வீரர் யாரும் இந்த பிரிவில் பதக்கம் வெல்லாதது, 1986 காமன்வெல்த் போட்டிக்குப் பிறகு இதுவே முதல் முறையாகும்.
* மகளிர் பளுதூக்குதலில் அசத்திய ஹர்விந்தர்
கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியின் மகளிர் பளுதூக்குதல் 69 கிலோ எடை பிரிவில் இந்திய வீராங்கனை ஹர்ஜிந்தர் கவுர், ஸ்நேட்ச் மற்றும் கிளீன் மற்றும் ஜெர்க் முறையில் புதிய போட்டி சாதனைகளுடன் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார். ஸ்நேட்ச் முறையில் 101 கிலோ, கிளீன் மற்றும் ஜெர்க் முறையில் 126 கிலோ என மொத்தம் 227 கிலோ எடை தூக்கிய ஹர்ஜிந்தர் கவுர் 2வது இடம் பிடித்தார்.
முன்னதாக, 2022 பர்மிங்காம் போட்டியில் இவர் வெண்கலம் வென்றிருந்தார். இந்த போட்டியில் கனடாவின் சார்லோட்டி சிமோனி (240 கி.) தங்கம் பதக்கமும், ஆஸ்திரேலியாவின் நியா பெபே ஹேமேன் (218 கி.) வெண்கலமும் வென்றனர். கிளாஸ்கோ தொடரின் பளுதூக்குதலில் இந்தியாவுக்கு கிடைத்த 7வது பதக்கம் இது.
* அம்மா கொஞ்சம் அப்செட்…
காமன்வெல்த் வெள்ளிப் பதக்கத்தை தனது தாய்க்கு சமர்ப்பித்த ஹர்ஜிந்தர் கூறியதாவது: எப்போது பதக்கம் வென்றாலும் அம்மாவுக்கு தான் முதலில் போன் போட்டு மகிச்சியை பகிர்ந்துகொள்வேன். இந்த முறையும் அவருடன் தான் பேசினேன். போட்டிகளில் பங்கேற்பதற்காக ஊர் ஊராக சுற்றிக் கொண்டே இருக்கிறேன் என அம்மா கொஞ்சம் அப்செட்டாக இருந்தார். காமன்வெல்த்தில் வெள்ளி வென்றதை அறிந்ததும் அவரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்.
வெள்ளி வென்றதில் எந்த ஏமாற்றமும் இல்லை.
பயிற்சியின்போது கிளீன் மற்றும் ஜெர்க் முறையில் இதைவிட அதிக எடையை தூக்கியிருக்கிறேன் என்றாலும், 6 முயற்சியிலும் சிறப்பாக செயல்பட்டதும் இந்த வெற்றியும் திருப்தி அளிக்கிறது. பதக்கத்தின் வண்ணத்தை மாற்ற வேண்டும் என்ற இலக்கோடுதான் கிளாஸ்கோ வந்தேன். அந்த எண்ணம் ஈடேறிவிட்டது.
மற்றும் கபடி வீராங்கனையாக தனது விளையாட்டு வாழ்க்கையை தொடங்கிய ஹர்ஜிந்தர், தினமும் பயிற்சிக்காக 5 கி.மீ. தூரத்துக்கு சைக்கிளில் சென்று வந்துள்ளார். மற்றும் 2016ல் பாட்டியாலாவில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் படித்தபோது தான் (20 வயது), கபடியில் இருந்து பளுதூக்குதலுக்கு மாறி பயிற்சியை தொடங்கியிருக்கிறார். அந்த பயணம் தற்போது காமன்வெல்த் பதக்கமாக அவரது கழுத்தை அலங்கரிக்கிறது.
