×

மூடுபனியால் குளிர்ச்சியான சூழல் வால்பாறையில் லேசான சாரல் மழை

வால்பாறை : வால்பாறை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக லேசான சாரல் மழை பெய்து வருவதால், குளிர்ச்சியான காலநிலை நிலவி வருகிறது. அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் மூடுபனியும் காணப்படுவதால், மலை நகரம் முழுவதும் ரம்மியமான தோற்றம் நிலவுகிறது.

வால்பாறை, ஆழியாறு வால்பாறை மலைச்சாலை, அட்டகட்டி, ரொட்டிக்கடை, பாறைமேடு, கவர்க்கல், சோலையாறு, சின்னக்கல்லாறு உள்ளிட்ட பகுதிகளில் இடைவிடாத சாரல் மழை மற்றும் அடர்ந்த மூடுபனி நிலவியது. இதனால் தேயிலை தோட்டங்கள் மற்றும் வனப்பகுதிகள் பசுமை போர்த்திய காட்சியளித்தன.

மூடுபனியின் காரணமாக சில இடங்களில் பார்வைத்திறன் 50 முதல் 100 மீட்டர் வரை குறைந்ததால், மலைச்சாலையில் பயணித்த வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு மெதுவாக சென்றனர். குறிப்பாக, 40 கொண்டை ஊசி வளைவுகள் மற்றும் வனப்பகுதியை ஒட்டிய சாலைகளில் கூடுதல் கவனத்துடன் பயணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து, நிலவி வரும் சாரல் மழையால் தேயிலை தோட்டங்களில் பறிப்பு பணிகள் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகின்றன. அதே நேரத்தில், வனப்பகுதிகளில் புதிய புற்கள் மற்றும் இலைகள் துளிர்விட்டுள்ளதால், யானை, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டமும் அதிகரித்து உள்ளது.

Tags : Valparai ,
× RELATED ஜனநாயகன் திரைப்பட கொண்டாட்டத்திற்காக...