*போலீசார் எச்சரிக்கை
கோவை : கோவை அரசு மருத்துவமனை முன்பு ‘நோ பார்க்கிங்’ அறிவிப்பை மீறும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர். கோவை அரசு மருத்துவமனையில் தினமும் ஏராளமானோர் உள் மற்றும் புற நோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர்.
சிகிச்சையில் உள்ளவர்களை பார்க்க வரும் சிலர் தங்களது இருசக்கர வாகனத்தை அரசு மருத்துவமனை முன்பு தாறு மாறாக நிறுத்தி செல்கின்றனர். இதனால் அவசர காலத்தில் ஆம்புலன்ஸ் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது.
மேலும் அந்த வழியாக நடந்து செல்லும் பாதசாரிகளும் பாதை இல்லாமல் அவதிப்படுகின்றனர். சில நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. இதன் காரணமாக விபத்து நிகழவும் வாய்ப்பு உள்ளது.
இதனை கருத்தில் கொண்டு போலீசார் அந்த பகுதியில் ‘நோ பார்க்கிங்’ அறிவிப்பு வைத்துள்ளனர். அதில், இது வாகனம் நிறுத்தம் இல்லை. உங்கள் வாகனத்தை நிறுத்தி இழக்காதீர்கள் என எச்சரிக்கை பலகையை நிறுவி உள்ளனர்.
இதனையும் மீறி இருசக்கர வாகனங்களை பலர் நிறுத்தி உள்ளனர். எனவே பொது மக்களின் பாதுகாப்பு, நோயாளிகளின் நலனை கருதி வாகனங்களை உரிய ‘பார்க்கிங்’ இடங்களில் மட்டுமே நிறுத்த வேண்டும் என போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர். மீறும் வாகன ஓட்டிகள் மீது அபராதம் அல்லது வாகன பறிமுதல் போன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.
