அமெரிக்காவில் உணவக திருவிழாவில் 2 பேர் சுட்டுக் கொலை: மக்கள் அலறியடித்து ஓட்டம்

சியாட்டில்: அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தில் உள்ள சியாட்டில் நகரில் அமைந்துள்ள சியாட்டில் சென்டர் பகுதியில், ‘பைட் ஆப் சியாட்டில்’ என்ற உணவக திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் கலந்துகொண்ட இந்த விழாவில், திடீரென மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில், திடீரென 7 முதல் 8 முறை துப்பாக்கி சூடு சத்தம் கேட்டதாக நேரில் பார்த்தவர்கள் பீதியுடன் தெரிவித்தனர்.

இந்த கொடூர தாக்குதலில் குழந்தைகள், 23 வயது இளைஞர் உட்பட 5 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்த சியாட்டில் போலீசார், சியாட்டில் சென்டர் வளாகத்தை முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து பொதுமக்களை வெளியேற்றினர். இந்த தாக்குதலைத் தொடர்ந்து, அப்பகுதியில் இயங்கும் மோனோரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதுடன், காயமடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்ட ஹார்பர்வியூ மருத்துவ மையமும் தீவிர பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டு லாக்டவுன் செய்யப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: