×

தமிழ்த்தாய் வாழ்த்தை புறந்தள்ள துணிவது தமிழ் மக்களின் உணர்வை உரசி பார்க்கும் செயல்: எஸ்டிபிஐ கட்சி கண்டனம்

சென்னை: தமிழ்த்தாய் வாழ்த்தைப் புறந்தள்ள துணிவது தமிழ் மக்களின் உணர்வை உரசிப் பார்க்கும் செயலாகும் என்று எஸ்டிபிஐ கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. எஸ்டிபிஐ கட்சி மாநில பொதுச் செயலாளர் நிஜாம் முகைதீன் வெளியிட்ட அறிக்கை:

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பல தசாப்தங்களாக பின்பற்றப்பட்டு வரும் பண்பாட்டு மரபுகளை காலில் போட்டு மிதிக்கும் வகையில், தமிழ்த்தாய் வாழ்த்தை பின்னுக்குத் தள்ளி புதிய வரிசையைப் பின்பற்ற வலியுறுத்தியுள்ள ஆளுநரின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது.

தமிழ்த்தாய் வாழ்த்து இயற்றிய மனோன்மணியம் சுந்தரனார் பெயரிலமைந்த பல்கலைக்கழகத்திலேயே, அந்த தமிழ்த்தாய் வாழ்த்தைப் புறந்தள்ள துணிவது தமிழ் மக்களின் உணர்வை உரசிப் பார்க்கும் செயலாகும். மாநில மொழிகளுக்கும் பண்பாடுகளுக்கும் முன்னுரிமை அளிப்பதே இந்திய நாட்டின் பன்முகத்தன்மையைப் பாதுகாக்கும்.

அதை சிதைக்கும் வகையில் செயல்படும் ஆளுநரின் இந்த உரிமை மீறல் போக்கை எஸ்டிபிஐ கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. பல்கலைக்கழக நிர்வாகமும் மாநில அரசும் ஆளுநரின் இந்த தன்னிச்சையான உத்தரவுக்கு பணியாமல், மாநிலத்தின் பாரம்பரிய மரபையும் தமிழ்த்தாய் வாழ்த்தின் முதன்மைத்துவத்தையும் உறுதியோடு நிலைநிறுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : SDBI ,Chennai ,SDBI party ,State Secretary General ,Nijam Muqaideen ,Nella ,Manonmaniam ,Sundarana University Graduation ,
× RELATED மாணவர்களின் பாதுகாப்பிற்காகவே...