×

மாணவர்களின் பாதுகாப்பிற்காகவே தர்மேந்திர பிரதான் பதவியை தியாகம் செய்துள்ளார்: பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கருத்து

சென்னை: மாணவர்களின் பாதுகாப்பிற்காகவே தர்மேந்திர பிரதான் பதவியை தியாகம் செய்துள்ளதாக நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: நீட் தேர்வு வினாத்தாள் கசிவிற்காக அமைதியான வழியில் முன்னெடுக்கப்பட்ட மாணவர் போராட்டத்திற்குள், சமூக விரோத அமைப்புகள் ஊடுருவ தொடங்கியதையும், நமது தேச ஒற்றுமைக்கும் பாதுகாப்பிற்கும் எதிரான முழக்கங்கள் ஒலிக்க ஆரம்பித்ததையும் யாரும் மறுக்க முடியாது.

இதை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, “மாணவர் போராட்டம்” என்ற போர்வையில், பொது அமைதிக்கும், மாணவர் பாதுகாப்பிற்கும் பங்கம் விளைவிக்க, சில சமூக விரோத அமைப்புகள் காத்துக் கொண்டிருந்தன. எனவே, தேசத்தின் ஒற்றுமையைக் காக்கவும், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், நமது மாணவர்கள் சட்டச் சிக்கல்களில் சிக்கிக் கொள்ளாமல் தங்கள் படிப்பிலும், எதிர்காலத்திலும், வாழ்க்கையிலும் கவனம் செலுத்த வேண்டுமென்ற நோக்கத்துடனும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் தர்மேந்திர பிரதான்.

இதற்கு பெயர் தோல்வியல்ல, “தார்மீகம்”. இளைஞர்களின் குரலுக்கு நமது பாஜ தலைமையிலான ஒன்றிய அரசு என்றுமே செவிசாய்க்க தவறுவதில்லை என்பதை உணர்த்தும் இந்நிகழ்வு, நமது நாட்டில் கருத்துரிமையும், அடிப்படை சுதந்திரமும் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது என்பதற்கான சான்று.

Tags : Dharmendra Pradhan ,BJP ,Nainar Nagendran ,Chennai ,Tamil Nadu ,NEET ,
× RELATED புதுக்கோட்டையில்...