- அஇஅதிமுக
- முன்னாள் அமைச்சர்
- கேசி வீரமணி
- வாணியம்பாடி
- முன்னாள்
- அமைச்சர்
- வாணியம்பாடி பைபாஸ் ரோடு, திருப்பத்தூர் மாவட்டம்
வாணியம்பாடி: என்னைய திருடன்னு சொல்றாங்க… அதிமுக கூட்டத்துக்கு வர மாட்டேன்… எனக்கூறி கூட்டத்தில் இருந்து பாதியில் மாஜி அமைச்சர் கே.சி.வீரமணி வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி பைபாஸ் சாலையில் உள்ள அதிமுக மாவட்ட தலைமை அலுவலகத்தில், புதிய மாவட்ட செயலாளர் மருத்துவர் பசுபதி தலைமையில் செயல்வீரர்கள் கூட்டம் நேற்று மாலை நடந்தது.
இக்கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய ஜோலார்பேட்டை எம்எல்ஏவுமான கே.சி.வீரமணி, வாணியம்பாடி தொகுதி முன்னாள் எம்எல்ஏ செந்தில்குமார், முன்னாள் எம்எல்ஏவும் ஆலங்காயம் ஒன்றிய செயலாளருமான கோ.வி. சம்பத்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டம் தொடங்கியதும் ஜோலார்பேட்டை ஒன்றிய செயலாளர் மணிகண்டன் பேசுகையில், ‘மாதனூர் மேற்கு ஒன்றிய செயலாளரும் தற்போது நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஆம்பூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த அதிமுக வேட்பாளருமான வெங்கடேசன், முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியை திருடன் எனக்கூறி அவதூறாக பேசி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருந்தார். இதற்காக அவர் முதலில் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என பேசினார்.
அப்போது, கூட்டத்தில் இருந்த ஒரு தரப்பினர் இந்த பிரச்னையை கடைசியில் பார்த்துக் கொள்ளலாம். தற்போது செயல்வீரர் கூட்டத்தை நடத்துங்கள் எனக்கூறினர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து கட்சியினரை கே.சி.வீரமணி சமரசப்படுத்தினார். தொடர்ந்து கே.சி.வீரமணி பேசுகையில், ‘எனக்கும் பொதுச்செயலாளருக்கும் இடையே ஆயிரம் பிரச்னைகள் இருக்கலாம்.
அதை நாங்களே பேசி சரி செய்து கொள்வோம். ஆனால், தேர்தலில் சீட் கிடைக்கும் வரை என்னுடன் இருந்துவிட்டு, வெற்றி வாய்ப்பை இழந்த விரக்தியில் தற்போது என்னை ‘திருடன்’ எனக்கூறி அதை சமூக வலைதளங்களில் வெங்கடேசன் பதிவிட்டதை ஒருபோதும் ஏற்கமுடியாது. தலைமையின் அறிவுறுத்தலின்பேரில் அவர் மன்னிப்பு கேட்பார் என்ற எதிர்பார்ப்பில் தான் இக்கூட்டத்திற்கு வந்தேன்.
ஆனால், மாவட்ட செயலாளருக்குக்கூட தகவல் தெரிவிக்காமல் அவர் இன்றைய கூட்டத்தை புறக்கணித்துள்ளார். எனவே, அவர் நேரில் மன்னிப்பு கேட்கும் வரை நானும் இனி அதிமுக கூட்டங்களில் பங்கேற்க போவதில்லை’ எனக் கூறிவிட்டு ஆவேசமாக கூட்டத்திலிருந்து வெளியேறினார். இருப்பினும் சில நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் இருந்த நிலையில் மாவட்ட செயலாளர் பசுபதி தலைமையில் செயல்வீரர் ஆலோசனைக் கூட்டம் நடந்து முடிந்தது.
