×

பட்டாசு ஆலை வெடி விபத்தில் 4 பேர் உடல் சிதறி உயிரிழப்பு: சிவகாசி அருகே சோகம்

சிவகாசி: சிவகாசி அருகே சட்டவிரோதமாக பட்டாசு தயாரிக்கும் போது ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே செங்கமலப்பட்டியை சேர்ந்தவர் முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் ரவீந்திரன். இவருக்கு சொந்தமான விவசாய நிலம் செங்கமலபட்டி – நாரணாபுரம் சாலையில் உள்ளது. இங்குள்ள கிணற்றின் அருகே சகோதரர்களான ராமச்சந்திரன் (40), ராம்பிரகாஷ் (30) ஆகியோர் தகர ஷெட் அமைத்து சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்து வந்தனர்.

நேற்று அதிகாலை ராமச்சந்திரன், ராம்பிரகாஷ், மீனம்பட்டியை சேர்ந்த இன்னாசிமுத்து (42), இவரது சகோதரர் அய்யப்பராஜ், பாண்டித்துரை ஆகியோர் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மருந்து உராய்வு காரணமாக திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. பயங்கர சத்தத்துடன் அடுத்தடுத்து இரண்டு முறை வெடித்ததில் விண்ணை முட்டும் அளவுக்கு புகை வெளிவந்தது. சுமார் 6 கிலோ மீட்டர் தூரம் அதிர்வை ஏற்படுத்தியது. தகவல் அறிந்த சிவகாசி தீயணைப்பு வீரர்கள்வந்து தீயை அணைத்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

விபத்தில் ராமச்சந்திரன் தவிர மற்ற நான்கு பேரும் உடல் சிதறி உயிரிழந்தனர். படுகாயங்களுடன் உயிருக்குப் போராடிய ராமச்சந்திரனை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். விபத்தில் இறந்த 4 பேரின் உடல் பாகங்களும் சுமார் 50 மீட்டர் தொலைவு வரை சிதறிக் கிடந்தன.

அவற்றை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பட்டாசு மூலப்பொருட்களை கொண்டு வந்த கார் எரிந்து நாசமானது. ஒரு பைக்கும் எரிந்த நிலையில் கிடந்தது. அருகே உள்ள 3 வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்தன. விபத்து குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

* பட்டாசு தயாரித்த 11 பேர் கைது
செங்கமலபட்டி பட்டாசு விபத்தை தொடர்ந்து நேற்று சிவகாசி சுற்றுப்பகுதியில் போலீசார் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர். இதில் சிவகாசி கிழக்கு கீழ திருத்தங்கல் வருமானவரித்துறை அலுவலகம் அருகில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு கடை அருகில் தகர ஷெட்டில் பட்டாசு தயாரித்த கடை உரிமையாளர் பள்ளபட்டி திருப்பதி (37), திருத்தங்கல் முத்துக்குமார் (41) உள்பட 11 பேரை போலீசார் கைது செய்தனர். இங்கிருந்து ஏராளமான பட்டாசுகளையும், பட்டாசு மூலப்பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

Tags : Sivakasi ,president ,Ravindran ,Chengamalapatti ,Virudhunagar district ,Chengamalapatti… ,
× RELATED மாணவர்களின் பாதுகாப்பிற்காகவே...