- மோடி அரசு
- எம்எம்ஏ
- சென்னை
- மனிதநேய மக்கள் கட்சி
- எம்.எச்.ஜவாஹிருல்லாஹ்
- யூனியன்
- கல்வி அமைச்சர்
- தர்மமேந்திர பிரதான்
சென்னை: மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்எல்ஏ வெளியிட்ட அறிக்கை: ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பதவி விலகல் மக்களின் ஒற்றுமையான போராட்டம் அதிகார ஆணவத்தை வீழ்த்த முடியும் என்பதற்கான வரலாற்று சான்றாகும். மாணவர்கள் அமைதியாகக் கேள்வி கேட்டால் அவர்களை தேசவிரோதிகளாக சித்தரிப்பதும், போராட்டம் நடத்தினால் காவல்துறையை ஏவுவதும், சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்தால் வழக்குப் பதிவு செய்வதும் ஜனநாயக ஆட்சியின் அடையாளமல்ல.
கருத்து வேறுபாட்டை குற்றமாக கருதும் அரசுகள், வரலாற்றில் ஒருபோதும் நீண்ட காலம் நிலைத்ததில்லை. தர்மேந்திர பிரதானின் பதவி விலகல் ஒரு முடிவு அல்ல; அது ஒரு தொடக்கம். இன்று மாணவர்கள் எழுப்பிய குரல் நாளை வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் இளைஞர்களின் குரலாக மாறும்; விவசாயிகளின் குரலாக மாறும்; தொழிலாளர்களின் குரலாக மாறும்; மாநில உரிமைகளைப் பாதுகாக்கும் மக்களின் குரலாக மாறும்.
மக்களின் ஒப்புதலால் கிடைத்த அதிகாரம், மக்களின் எதிர்ப்புக்கு முன் நிரந்தரமாக நிலைத்திருக்க முடியாது. ஒன்றிய அரசு தனது ஆணவ அரசியலைக் கைவிட்டு, மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதோடு மட்டுமல்லாமல், கல்வி நிர்வாகத்தில் முழுமையான சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். 2024 தேர்தல் பாஜவிற்கு அரசியல் எச்சரிக்கையாக இருந்தது என்றால், இளைஞர்களின் இந்த எழுச்சி எதிர்கால அரசியல் மாற்றத்திற்கான முன்னுரையாக அமையும்.
