×

காவிரி பிரச்னையில் இன கலவரத்தை தூண்ட முயற்சி கர்நாடக முதல்வரின் அழைப்பை விஜய் நிராகரிக்க வேண்டும்: பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தல்

கொள்ளிடம்: காவிரி நீர் பிரச்னைக்காக கர்நாடக முதல்வரின் அழைப்பை தமிழக முதலமைச்சர் விஜய் நிராகரிக்க வேண்டும் என பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: காவிரி நீர் பிரச்னை சம்பந்தமாக கர்நாடக முதலமைச்சர், தமிழக முதலமைச்சர் விஜய்யை பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறோம் என்ற பெயரால் கர்நாடகத்தில் இன கலவரத்தை மறைமுகமாக தூண்டுகிறார்களோ என்ற அச்சம் தோன்றுகிறது.

கர்நாடக முதல்வர் டிகே.சிவக்குமார் நடவடிக்கை மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய பேராபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தற்போது கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரிலிருந்து கர்நாடகாவுக்குள் தமிழக வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை. தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறது. இது இன கலவரத்தை தூண்டுவதற்கான முயற்சியே.  உச்ச நீதிமன்றம் 2013ல் கர்நாடகம், தமிழ்நாட்டிற்கு இடையில் பேச்சுவார்த்தை இல்லை என்பதை உறுதிப்படுத்தியதன் அடிப்படையில் கர்நாடக முதல்வர், தமிழக முதல்வரை பேச்சுவார்த்தைக்கு அழைப்பதை தமிழக முதல்வர் ஏற்கக்கூடாது என்பதை வலியுறுத்தி வருகிறோம்.

உச்ச நீதிமன்றம் முன்னிலையில் ஆணையம் செயல்படுவதால் இரு முதல்வர்களும் சந்தித்து பேசுவதில் எந்த பயனும் இல்லை. இந்த சந்திப்பு என்பது கர்நாடகாவில் உள்ள தமிழர்களுக்கு பெரிய ஆபத்தாக முடியும். எனவே கர்நாடக முதலமைச்சர் அழைப்பை தமிழக முதல்வர் நிராகரிக்க வேண்டும். கர்நாடக முதல்வரின் அழைப்பை நிராகரிப்பது ஒன்றுதான் தமிழக காவிரி உரிமையை பாதுகாப்பதற்கு உதவிகரமாக இருக்கும். கர்நாடக தமிழர்களுக்கும் உதவிகரமாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Vijay ,Karnataka ,Chief Minister ,P.R. Pandian ,Kollidam ,Tamil Nadu ,Tamil Nadu All Farmers' Associations Coordination Committee ,President ,Kollidam, Mayiladuthurai district ,
× RELATED மாணவர்களின் பாதுகாப்பிற்காகவே...