சென்னை: இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், அனைத்து கோயில் அதிகாரிகளுக்கும் முக்கிய அறிவுறுத்தல்கள் வழங்கிக் கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியுள்ளதாவது: அனைத்து கோயில்களிலும் நேர்மையான, வெளிப்படையான மற்றும் பொறுப்புமிக்க நிர்வாகம் உறுதி செய்யப்பட வேண்டும். லஞ்சம், நிதி முறைகேடு, நிர்வாக அலட்சியம் உள்ளிட்ட எந்தவொரு தவறும் கண்டறியப்பட்டாலும், சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடி துறை ரீதியான மற்றும் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
கோயில் நிலங்கள் மற்றும் சொத்துகள் மீது ஆக்கிரமிப்பு, சட்டவிரோத பெயர் மாற்றம் அல்லது உரிமை கோரும் முயற்சிகள் எதுவும் அனுமதிக்கப்படக் கூடாது. இதுபோன்ற சம்பவங்கள் கண்டறியப்பட்டால், உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு, காவல்துறையில் புகார் அளித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும். நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு முன்பாக அமைச்சர் மற்றும் ஆணையரின் கவனத்திற்கு உடனடியாகக் கொண்டு வரப்பட வேண்டும்.
கோயில் தொடர்பான நீதிமன்ற வழக்குகள் விசாரணைக்கு வரவிருந்தால், அதன் முழு விவரங்களும் குறைந்தபட்சம் 2 நாட்களுக்கு முன்பாகவே அமைச்சர் மற்றும் ஆணையருக்குத் தெரிவிக்கப்பட வேண்டும். அனைத்து கோயில்களிலும் பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை பராமரிக்கட வேண்டும். பக்தர்கள் நீண்ட நேரக் காத்திருப்பை தவிர்க்க வேண்டும். பக்தர்களுக்குச் சிரமம் ஏற்படுத்தும் சம்பவங்கள் ஏற்படக் கூடாது.
அனைத்து அதிகாரிகளும் தினசரி கோயில்களை நேரில் ஆய்வு செய்து, நிர்வாகம், தூய்மை, பாதுகாப்பு, செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும். முறைகேடுகளை தடுக்க தவறுதல், தகவல்களை மறைத்தல் அல்லது அமைச்சர் மற்றும் ஆணையரின் கவனத்திற்கு கொண்டு வராதது கடுமையான அலட்சியமாகக் கருதப்படும். இதுபோன்ற தவறுகள் தொடர்ந்து நிகழ்ந்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது எந்தவித பாரபட்சமும் இன்றி உடனடியாக கடுமையான துறைரீதியான மற்றும் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
