நீட் போராட்டம், வறட்சியை விட ஜனநாயகன் தோல்வியால்தான் முதல்வர் கவலையில் உள்ளார்: மாஜி அமைச்சர் உதயகுமார் கிண்டல்

மதுரை: மாஜி அமைச்சர் உதயகுமார் நேற்று வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: ஊரே போராட்ட களத்தில் இருக்கும்போது தன் சகாக்களுடன் ஜனநாயகன் படத்தை கண்டு களித்திருக்கிறார் முதல்வர். இது என்ன தேச குற்றமா என்று விஜய்யின் தம்பிகள் கேட்கிறார்கள். மாநிலம் முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் நிலையில் ஜனநாயகன் திரைப்படம் வெற்றி பெற வேண்டும் என்று, மண்டியிட்டு மண் சோறு சாப்பிட்டு இருக்கிறார்கள் விஜய்யின் தம்பிமார்கள். நீட் தேர்வு வினாத்தாள் கசிவிற்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவாகவோ, எதிர்ப்பாகவோ இதுவரை கருத்து சொல்லாமல் இருக்கிறார் முதல்வர் விஜய்.

ஒருவேளை ஜனநாயகன் திரைப்படம் இந்த நீட் போராட்டத்தினால் பிளாப் ஆகிவிட்டது என்கிற கவலையிலே இருக்கிறாரோ என்னவோ? இரண்டு நாளாக தலைமைச் செயலகத்திற்கு வரவில்லை. நாடு எதிர் கொண்டிருக்கிற மிகப்பெரிய வறட்சி பேரிடர் குறித்து உரிய கவனம் செலுத்துமா தவெக அரசு என்பது தான் நாட்டு மக்களின் மிகப்பெரிய கவலையாக உள்ளது. தமிழக அணைகளில் நீர் இருப்பு வேகமாக குறைகிறது.

பல ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் கடுமையாக வறட்சி ஏற்படும் அபாயம் உருவாகி இருக்கிறது. இந்தக் கவலைகள் இல்லாமல், ஜனநாயகன் திரைப்படம் பிளாப் ஆகிவிட்டதோ என்று கவலையில் ஆழ்ந்து இருக்கிறார் முதல்வர். அந்த கவலையிலிருந்து வெளியே வருவதற்கு தமிழ்நாட்டு மக்கள் என்னதான் செய்ய முடியும் என தெரியவில்லையே‌?

நீட் தேர்வு போராட்டத்தினால் ‘ஜனநாயக’ போராட்டம் தோல்வியடைந்து விட்டதோ என்கிற கவலையிலேயே இருக்கிறார் முதல்வர். மீண்டு எழுந்து அருணாச்சலம் என்ற இளைஞர் காவல் நிலையத்தில் உயிரிழந்திருக்கிறாரே, அந்த தாயின் கண்ணீரை துடைக்க வருவாரா? எங்களுக்கு சாரி வேண்டாம். நீதி தான் வேண்டும் என்று போராடுகிற அந்த விஜய்யை தமிழ்நாட்டில் காணவில்லையே என்று தேடிக் கொண்டிருக்கிற ஜென்சி தலைமுறைக்கு விடை கொடுப்பாரா முதல்வர் விஜய். இவ்வாறு கூறியுள்ளார்.

Related Stories: