சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் தொழிற்சாலைகளுக்கான ஒதுக்கீட்டின் கீழ், தனது மகனுக்கு பி.இ. படிப்பில் இடம் வாங்கி தரக்கோரி, கடந்த 2009ம் ஆண்டு ஜூலை மாதம், அசோக் நகரை சேர்ந்த ஆர்.சேகர் என்பவர், அண்ணா நகரை சேர்ந்த கே.அன்வர் உசேன் மூலமாக மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த டி.ரவீந்திரபாபு என்பவரிடம் 13 லட்ச ரூபாய் கொடுத்தபோது, சிபிஐ அதிகாரிகளால் கையும் களவுமாக பிடிக்கப்பட்டனர்.
இதுதொடர்பாக, இருவர் மீதும் ஊழல் தடுப்புச் சட்டம், குடியமர்வு சட்டம், இந்திய தண்டனைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் இருவருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இருவர் மீதான தண்டனையும் ரத்து செய்யப்பட்டது.
இதற்கிடையில், சிபிஐயால் பதிவு செய்யப்பட்ட மூல வழக்கின் அடிப்படையில் 2012ம் ஆண்டு அமலாக்க துறையும் வழக்குப்பதிவு செய்தது. சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றுள்ளதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், இருவருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும, தலா 5000 ரூபாய் அபராதமும் விதித்து அமலாக்க துறை வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் தீர்ப்பளித்தது.
இதை எதிர்த்து, சம்மந்தப்பட்ட இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சி.மணிசங்கர், வழக்கறிஞர் எம்.ரவி ஆகியோர் ஆஜராகி, மூல வழக்கில் தண்டிக்கப்பட்ட உத்தரவும், தண்டனையும் ரத்து செய்யப்பட்டிருப்பதால், அந்த மூல வழக்கின் அடிப்படையில் அமலாக்க துறை வழக்கில் பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பும் ரத்து செய்யப்பட வேண்டும் என்று வாதிட்டனர்.
அமலாக்க துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆ.எல்.சுந்தரேசன், சிபிஐ வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனை உயர் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து அந்த தீர்ப்பு மாற்றப்பட்டால் அமலாக்க துறையும் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க அனுமதிக்க வேண்டும் என்று வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், சிபிஐ வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனை ரத்து செய்யப்பட்டதால், அந்த வழக்கின் அடிப்படையில் அமலாக்க துறை வழக்கில் தண்டிக்கப்பட்ட உத்தரவும் ரத்து செய்யப்பட தகுதியானது என கூறி, சேகர், அன்வர் உசேன் ஆகியோருக்கு அமலாக்கத் துறை வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையையும் ரத்து செய்து உத்தரவிட்டனர்.
சிபிஐ பதிவுசெய்த மூல வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டு, தண்டனை ரத்து செய்யப்பட்டால், அமலாக்க துறை சட்டப்படி மேல் நடவடிக்கைகளை எடுக்க அனுமதி வழங்கப்படுகிறது என்றும் நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.
