அரசு மனநலக் காப்பகத்தில் விசாரணைக் கைதி அடித்துக் கொலை பாதுகாப்புக் குறைபாடே காரணம்: எஸ்டிபிஐ கட்சி கண்டனம்

சென்னை: எஸ்டிபிஐ கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் அமீர் ஹம்சா வெளியிட்ட அறிக்கை: சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநலக் காப்பகத்தில் சிகிச்சையில் இருந்த தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த பேச்சுத் திறனற்ற மாற்றுத்திறனாளி விசாரணைக் கைதி ஜாகீர் என்பவர், கழிவறையைப் பயன்படுத்துவதில் ஏற்பட்ட தகராறில் சக கைதியான அரவிந்தசாமி என்பவரால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சியையும் மிகுந்த வேதனையையும் அளிக்கிறது. ​

அரசு மருத்துவமனைகள் மற்றும் காப்பகங்களில், குறிப்பதாக மனநலக் காப்பகங்களில், தீவிர சிகிச்சையிலும் கண்காணிப்பிலும் இருக்க வேண்டிய கைதிகளுக்கு இடையே இத்தகைய வன்முறைச் சம்பவம் நடந்துள்ளது, அங்கு நிலவும் மோசமான பாதுகாப்பற்ற சூழலையே வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது. சிகிச்சையில் உள்ள கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதும், அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் தொடர் கண்காணிப்பில் வைப்பதும் சிறைத்துறை மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தின் தலையாய கடமையாகும்.

ஆனால், இந்தக் கடமையில் அதிகாரிகள் காட்டிய அலட்சியப் போக்கே விசாரணைக் கைதி ஒருவரின் உயிரிழப்பிற்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது. அரசின் முழுப் பாதுகாப்பில் இருக்க வேண்டிய ஒரு விசாரணைக் கைதி காப்பகத்திற்குள்ளேயே அடித்துக் கொல்லப்பட்ட இந்தச் சம்பவத்திற்கு, எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் எனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்கிறோம்.

விசாரணைக் கைதி ஜாகீர் உயிரிழப்பிற்கு காரணமான இந்தச் சம்பவம் குறித்து நடுநிலையான உயர்மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும். பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணியில் அலட்சியமாகச் செயல்பட்ட சிறைத்துறை மற்றும் மருத்துவமனை அதிகாரிகள் மீது உடனடியாகக் கடுமையான துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ​

மேலும், உயிரிழந்த மாற்றுத்திறனாளியான விசாரணை கைதி ஜாகீர் குடும்பத்திற்குத் தமிழக அரசு உடனடியாக உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இனிவரும் காலங்களில் அரசு மனநலக் காப்பகங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளின் கைதிகள் பிரிவில் போதிய எண்ணிக்கையில் பாதுகாப்புக் காவலர்களை நியமித்து, தீவிர கண்காணிப்பு உள்ளிட்ட பாதுகாப்பு நடைமுறைகளை முழுமையாக உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: