புதுடெல்லி: தலா 2000 ஏக்கர் பரப்பளவில் மூன்று பெரிய ரசாயனப் பூங்காக்.களை அமைப்பதற்கு ரூ.3030கோடி மதிப்பிலான புதிய திட்டத்தை அரசு அறிவித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான ஒன்றிய அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நாட்டில் மூன்று பிரத்யேக ரசாயன பூங்காக்களை அமைப்பதற்காக பாரத் தொழிலக விகாஸ் யோஜனா ரசாயன் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 2026-2027 நிதியாண்டிற்கான ஒன்றிய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இந்த திட்டத்தின் மொத்த நிதி ஒதுக்கீடு ரூ.3030கோடியாகும்.
அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி பூங்காக்களுக்குள் பொது உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் அடிப்படை பயன்பாட்டு வசதிகளை அமைப்பதற்கான செலவுகளுக்கு ரூ.3000 கோடி ஒதுக்கப்படும். மீதமுள்ள ரூ.30கோடி நிர்வாக செலவுகளுக்காக பயன்படுத்தப்படும். இந்த திட்டமானது நடப்பு நிதியாண்டு முதல் 2030-2031 நிதியாண்டு வரை 5 ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்படும்.
மாநில அரசுகள் மூலம் சவால் முறை அடிப்படையில் மூன்று பிரத்யேக ரசாயனப் பூங்காக்களை உருவாக்குவதற்கு அரசு வழிவகை செய்யும். இத்தகைய ஒவ்வொரு பூங்காவும் குறைந்தபட்சம் சுமார் 2000 ஏக்கர் பரப்பளவு கொண்ட எந்தவித சட்ட சிக்கலும் இல்லாத நிலத்தைக் கொண்டிருக்கும். ஒரு பூங்காவிற்கு ஒன்றிய அரசு ரூ.1000கோடி ரூபாய் வரை மானியம் வழங்கும்.
எனினும் இதற்கு சம்பந்தப்பட்ட மாநில அரசு குறைந்தபட்சம் ரூ.500கோடி பங்களிப்பாக வழங்க வேண்டும். ஒவ்வொரு பூங்காவிலும் ரூ.20ஆயிரம் கோடி முதல் ரூ.50ஆயிரம் கோடி வரையிலான முதலீடுகள் மேற்கொள்ளப்படலாம். மூன்று பூங்காக்களை அமைப்பது இந்திய ரசாயனத்துறையை உலக அளவில் போட்டித்தன்மை வாய்ந்ததாக மாற்றும் என்று அரசு தெரிவித்துள்ளது.
மேலும் அமைச்சரவை கூட்டத்தில் கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேச மாநிலங்களுக்கு இடையே அமைந்துள்ள பல்லாரி- குண்டக்கல் வழித்தடத்தில் மூன்றாவது மற்றும் நான்காவது ரயில் பாதைகளை அமைப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் கதி சக்தி தேசிய முதன்மைத் திட்டத்தின் கீழ் ரூ.1264கோடியில் இந்த திட்டம் மேற்கொள்ளப்படும்.
