×

வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் 3 ஆண்டு சிறை: மாநிலங்களவையில் மசோதா அறிமுகம்

புதுடெல்லி: வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் குற்றச்செயலாக கருதும் மசோதா மாநிலங்களவையில் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு விழா கொண்டாட்டங்கள் நடைப்பெற்று வருகின்றது. இந்தியாவின் சுதந்திரப்போராட்டத்தில் வரலாற்று சிறப்பு மிக்க பங்காற்றிய பங்கிம் சந்திர சட்டோபாத்யாயால் இயற்றப்பட்ட வந்தே மாதரம் பாடலுக்கு தேசிய கீதத்துக்கு இணையான அந்தஸ்து அளிக்கப்படும் என்று 1950ம் ஆண்டு ஜனவரி 24ம் தேதி நடைபெற்ற அரசியலமைப்பு நிர்ணய சபை கூட்டத்தில் அதன் தலைவர் ராஜேந்திர பிரசாத் அறிவித்து இருந்தார்.

தற்போது வந்தே மாதரம் பாடலை பாடுவதை அவமதிப்பதை தடுப்பதற்கான குறிப்பிட்ட சட்ட ஏற்பாடு எதுவும் இல்லை. இந்த சூழலில் அரசு வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் குற்றச்செயலாக கருதும் மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்துள்ளது. தேசியப்பாடலான வந்தே மாதரம் பாடலை பாடுவதற்கு தடையை ஏற்படுத்துவதையோ அல்லது அதை அவமதிப்பதையோ குற்றச்செயலாக மாற்றும் மசோதாவை மாநிலங்களவையில் அரசு நேற்று அறிமுகம் செய்தது.

உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய் தேசிய கவுரவ அவமதிப்புத் தடுப்பு(திருத்த)மசோதா 2026ஐ அறிமுகப்படுத்தினார். இந்த மசோதா தேசிய கவுரவ அவமதிப்புத் தடுப்புச் சட்டம் 1971ல் திருத்தம் செய்கின்றது. இந்த சட்டம் தேசியக் கொடி, தேசியச் சின்னங்களை அவமதிப்பதையோ அல்லது அவற்றுக்கு மரியாதை குறைவான செயல்களில் ஈடுபடுவதையோ குற்றமாக கருதி அதற்காக மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிப்பதற்கு வழிவகை செய்கின்றது.

தேசிய கீதமான ஜன கண மன- க்கு அளிக்கப்பட்டுள்ள அதே சட்டப்பூர்வ பாதுகாப்பை வந்தே மாதரம் பாடலுக்கும் வழங்குவதை இந்த மசோதா நோக்கமாக கொண்டுள்ளது. வந்தே மாதரம் பாடலை பாடுவதை யாரும் வேண்டுமென்றே தடுப்பதையோ அல்லது அந்த பாடலை பாடும் கூட்டத்தில் இடையூறு விளைவிப்பதையோ தடை செய்யவும் அத்தகைய செயல்களை தண்டனைக்குரியதாக மாற்றவும் இந்த சட்டத்தின் பிரிவு 3ல் திருத்தம் செய்து தேசியப்பாடலையும் அதன் வரம்பிற்குள் கொண்டு வருவதற்கும் மசோதாவில் முன்மொழியப்பட்டுள்ளது.

Tags : Rajya ,Sabha ,New Delhi ,Rajya Sabha ,Vande ,Bankim Chandra Chattopadhyay ,India ,
× RELATED டெல்லியில் போராடிய மாணவர்கள் மீது...