- ஹிமாச்சல
- சிம்லா
- ஹிமாச்சல பிரதேசம்
- உதய்பூர்-பாங்கி சாலை
- லாஹுல்-ஸ்பிதி மாவட்டம்
- பாங்குய்
- சம்பா மாவட்டம்
சிம்லா: இமாச்சல பிரதேசத்தில் ராட்சதப்பாறை விழுந்ததில் கார் நசுங்கி 13 பேர் பலியானார்கள். இமாச்சலப்பிரதேசத்தின் லாஹுல்-ஸ்பிதி மாவட்டத்தில் உள்ள உதய்பூர்-பாங்கி சாலை மலைப்பகுதியில் அமைந்துள்ளது. அந்த சாலையில் அடிக்கடி நிலச்சரிவு ஏற்பட்டு மூடப்படும். சம்பா மாவட்டத்தின் பாங்கி பகுதியைச் சேர்ந்தவர்கள் 15 பேர் ஒரு டாடா சுமோ காரில் அந்த வழியாக பயணம் செய்தனர்.
நேற்று முன்தினம் உதய்பூர்-கில்லார் சாலை மூடப்பட்டிருந்ததால் பயணிகள் டிண்டி பகுதியில் சிக்கியிருந்தனர். சாலை மீண்டும் திறக்கப்பட்ட பிறகு அவர்கள் நேற்று பாங்கி நோக்கிப் பயணத்தைத் தொடங்கினர். அப்போது மலையிலிருந்து ராட்சதப் பாறைகள் திடீரென சரிந்து விழுந்ததில், ஆறு மாதக் குழந்தை உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இருவர் நூலிழையில் உயிர் தப்பினர்.
கடு நாலா பகுதிக்கு அருகே சென்றபோது, பெரிய பாறைகள் திடீரென வாகனத்தின் மீது விழுந்து நொறுங்கியது. இதனால் வாகனத்தின் பின்பகுதி தீப்பிடித்து எரிந்தது. மாவட்டத் தலைமையகமான கீலாங்கிலிருந்து சுமார் 70 கி.மீ தொலைவில் உள்ள அந்த இடத்தில், அங்கிருந்தவர்களும் ராணுவ வீரர்களும் தீயை அணைக்க முயன்றனர். வாகனம் கிட்டத்தட்ட தட்டையாக நசுங்கி, தீயில் எரிந்தது.
இதில் 6 மாத குழந்தை மற்றும் எட்டு ஆண்களும் நான்கு பெண்களும் பலியாகி விட்டனா். இந்த விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சாலை விபத்தில் 13 பேர் உயிரிழந்ததற்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் சுக்வீந்தர் சிங் சுகு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குமாறு உத்தரவிட்டார்.
