திருவாரூர்: திருவாரூரில் தவெகவினர் இடையே கைகலப்பு ஏற்பட்டது திருவாரூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவாரூர் வடக்கு மாவட்ட தவெக செயலாளர் மதன். மாவட்ட இணை செயலாளர் ஆனந்தராஜ். இவர்கள் இருவருக்கும் பனிப்போர் இருந்து வருகிறது. இந்நிலையில் திருவாரூர் தைலம்ைம திரையரங்கில் ஜனநாயகன் திரைப்படம் நேற்று வெளியானது. திரைப்படத்தை மதனின் சகோதரர் மனோஜ்(33), அவரது நண்பர் தமிழ் ஆகியோர் பார்த்தனர். திரைப்படம் முடிந்து இருவரும் திரையங்கின் வெளியே வந்தனர். அப்போது மாவட்ட இணை செயலாளர் ஆனந்தராஜ் தரப்பு சார்பில் விதைப்பந்து வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
அந்த நேரத்தில் மதன் தலைமையில் ஒரு மாதத்துக்கு முன் கட்சியில் இணைந்த புலிவலத்தை சேர்ந்த டாக்டர் கோபிநாத் திரைப்படத்தை பார்த்து விட்டு வெளியே வந்து தனது காரை எடுக்க முயன்றார். அப்போது விதைப்பந்து வழங்கும் இடத்தில் இருந்த ஒருவர் மீது கார் மோதியது. இதை பார்த்த ஆனந்தராஜின் ஆதரவாளரான தவெக மாணவரணி அமைப்பாளர் பசுபதி(33) சம்பவ இடத்துக்கு வந்து ஏன் காரை வைத்து மோதினாய் என்று கோபிநாத்திடம் கேட்டார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த மனோஜ், தமிழ் ஆகியோர் சேர்ந்து பசுபதியை தாக்கினர்.
இதனால் வலி தாங்க முடியாமல் பசுபதி கீழே விழுந்தார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உதவியுடன் பசுபதி மீட்கப்பட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
