Mann Ki Baat-ல் அல்ல; நாடாளுமன்றத்தில் பேசுங்கள், அறிக்கை வெளியிடுங்கள் – மல்லிகார்ஜுன கார்கே விளாசல்

டெல்லி: நீட் தேர்வு வினாத்தாள் கசிவு பிரச்சினை குறித்து, ‘மான் கி பாத்’ நிகழ்வில் உரை ஆற்றுவதற்குப் பதில், பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் அதிகாரப்பூர்வமாக ஒரு அறிக்கை வெளியிட வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே வலியுறுத்தி உள்ளார்.

வினாத்தாள் கசிவுகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பதற்கான வழிமுறைகள் அடங்கிய மசோதாவை அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் அரசு தாக்கல் செய்யும் என பிரதமர் மோடி நேற்றிரவு அறிவித்த நிலையில், மல்லிகார்ஜுன் கார்கே மேற்கண்ட கருத்தை வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக பேசியிருக்கும் மல்லிகார்ஜுன கார்கே, ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும், வினாத்தாள் கசிவுக்கு மாணவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது தடியடி மற்றும் பெல்லட் குண்டுகள் பிரயோகம் செய்ய உத்தரவிட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கார்கே வலியுறுத்தி உள்ளார். இதையெல்லாம் செய்த பிறகு, கல்வி முறை குறித்து விரிவான விவாதத்தை நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று குறிப்பிட்டு காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டை உறுதிபட தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெறும் வேளையில், பிரதமர் அவையில் இந்த விவகாரம் குறித்த அறிக்கையை அளிக்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஆனால் நாடாளுமன்றத்திற்கு வெளியே அவர் ஒருதலைப்பட்சமான ‘மான் கி பாத்’ (Mann Ki Baat) உரையை வழக்கம் போல நிகழ்த்த கூடாது,” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

Related Stories: