வீரகநல்லூர் ஊராட்சியில் சீரான குடிநீர் வழங்க கோரிக்கை

 

திருத்தணி, ஜூலை 24: திருத்தணி ஒன்றியம் வீரகநல்லூர் ஊராட்சியில் முஸ்லிம் நகரில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஊராட்சி நிர்வாகம் சார்பில் 5 ஆழ்துளை கிணறுகள் அமைத்து கிராமத்தில் உள்ள 4 மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளில் மின் மோட்டார் மூலம் சேமித்து குழாய்களில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கோடை வெயிலுக்கு ஊராட்சியில் பெரும்பாலான ஆழ்துளை கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது.

இதனால், கிராம மக்களுக்கு சீரான குடிநீர் கிடைக்காத நிலையில் கிராம மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். இந்நிலையில், முஸ்லிம் நகர் சேர்ந்த பெண்கள் திருத்தணி வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வியை சந்தித்து குடிநீர் தட்டுப்பாடு குறித்து புகார் செய்தனர்.  நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளதால் குடிநீருக்கு பாதிப்பு அதிகரித்து வருவதை தடுக்க புதிய ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் தடையின்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பெண்களிடம் அதிகாரி உறுதியளித்தார்.

Related Stories: