இறைவனும் மனிதனும்

பகுதி 7

ஆன்மிகத்தின் மிக முக்கியமான அடித்தளம் ‘வினைக் கொள்கை’ இந்த வினைக்கொள்கையைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல், நம் வாழ்வில் நடக்கக்கூடிய எந்தவொரு நிகழ்வின் உண்மையையும் நம்மால் துளியும் கிரகிக்க முடியாது. வினையின் பின்னணியை அறியாமல் ஒரு சம்பவத்தை அணுகும்போது, அது நமக்குத் தவறான, பொய்யான புரிதல்களையே தரும். உதாரணமாக, ஒருவனுக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் போது, அதைப் பார்க்கும் நம் மனம் பதறுகிறது; வேதனைப்படுகிறது. இது மனித இயல்பு. ஆனால், அந்தத் தண்டனைக்குரிய மிகக் கொடுமையான, பாதகமான ஒரு காரியத்தை அவன் கடந்த காலத்தில் செய்து வந்திருக்கிறான் என்பது அந்தப் பதற்றத்தில் நம் கண்களுக்குத் தெரிவதில்லை.
இங்கே புறக்கண்ணால் பார்க்கும் நிகழ்காலப் பரிதாபத்தையும், அகக்கண்ணால் பார்க்க வேண்டிய அவனது கடந்தகால வினையையும் ஒரே நேரத்தில் இணைத்துப் பார்க்கக் கூடிய ஆற்றல் நமக்கு வேண்டும்.
அந்த முப்பரிமாணப் பார்வை இருந்தால் மட்டுமே, உலகியல் நிகழ்வுகளின் பின்னுள்ள உண்மையை நம்மால் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும். நம் முன்னோர்கள் வினைகளை மூன்று விதமாகப் பிரித்துச் சொன்னார்கள்:
1. பழவினை (சஞ்சித கர்மம்): நாம் பல பிறவிகளாகச் சேர்த்து வைத்திருக்கும் வினைகளின் மொத்தத் தொகுப்பு.
2. நுகர்வினை (பிராரப்த கர்மம்): அந்தப் பழவினையின் ஒரு பகுதி, இப்பிறவியில் நாம் அனுபவிப்பதற்காகப் பிரித்துத் தரப்பட்டிருப்பது.
3. எதிர்வினை (ஆகாம்ய கர்மம்): இப்பிறவியில் நாம் செய்யும் செயல்களால் எதிர்காலத்திற்காகச் சேர்த்துக் கொள்ளும் புதிய வினை.
விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் உள்ள முதன்மை வேறுபாடே இந்த வினைகளைக் கையாளும் முறையில்தான் இருக்கிறது. ஐந்தறிவு கொண்ட விலங்குகளுக்கு ‘நுகர்வினை’ மட்டுமே அனுபவமாக இருக்கும். அவை, தம் பழைய வினையை அனுபவித்துத் தீர்க்குமே தவிர, புதிய வினைகளை உருவாக்குவதில்லை. ஆனால், மனிதனுக்கு அப்படியல்ல. மனிதனுக்குரிய ஆறாவது அறிவு விழிப்புணர்வோடு செயல்படாத போது, அவன் நுகர்வினையை அனுபவிக்கும் அதே வேளையில், தன் அறியாமையால் புதிய ‘எதிர்வினையை’ (ஆகாம்யத்தை) உண்டாக்கிக் கொள்கிறான். இது மனிதனுக்கே உரிய ஒரு விசித்திரமான, ஆபத்தான இயல்பு. எப்போது ஒரு மனிதன், தன் ஆத்மாவிற்கு நன்மை எது, தீமை எது என்பதைத் தெளிவாக அறிந்து, விழிப்புணர்வோடு செயல்படத் தொடங்குகிறானோ, அப்போது அவனுக்கு நுகர்வினையின் காரணமாகப் புதிய எதிர்வினை வருகின்ற வாய்ப்பு இல்லாமல் போகிறது.
ஆன்மிக வாழ்விலும் சரி, உலகியல் வாழ்விலும் சரி, `விழிப்புணர்வு’ என்பது எவ்வளவு இன்றியமையாதது என்பதை நமது யோக நூல்களும், உபநிடதங்களும் மிக ஆழமாக வலியுறுத்துகின்றன. விழிப்புணர்வே ஆன்மாவின் இயல்பு என்றும், அதுவே வினைகளை வெல்லும் பேராயுதம் என்றும் அவை நமக்குக் கற்றுத்தருகின்றன. உபநிடதங்களின் மிக முக்கியமான முழக்கமே மனிதனை அறியாமை என்ற உறக்கத்திலிருந்து விழித்தெழச் சொல்வதுதான். “கடோபநிடதம்’’ புகழ்பெற்ற ஒருவரிக் கட்டளையை நமக்குத் தருகிறது.
“உத்திஷ்டத ஜாக்ரத பிராப்ய வரான் நிபோதத…’’
எழுந்திருங்கள், விழித்திருங்கள், அறிஞர்களை அடைந்து ஞானத்தைப் பெறுங்கள்!
இங்கே `ஜாக்ரத’ என்பது வெறும் தூக்கத்திலிருந்து எழுவதைக் குறிப்பதல்ல; நம்மைச் சுற்றி நடக்கும் வினைகளையும், நம் மனதின் எண்ண ஓட்டங்களையும் ஆன்ம விழிப்புணர்வோடு கவனிக்கத் தொடங்குவதைக் குறிக்கிறது.
உபநிடதங்கள் மனித உடலை ஒரு தேராகவும், புலன்களைக் குதிரைகளாகவும், மனதைக் கடிவாளமாகவும், புத்தியைத் தேரோட்டியாகவும் உருவகிக்கின்றன. தேரோட்டியாகிய புத்திக்கு `விழிப்புணர்வு’ இல்லையென்றால், குதிரைகள் தேரை ஏதேனும் பள்ளத்தில் தள்ளிவிடும். அதாவது, விழிப்புணர்வு இல்லாத அறிவு, ஆபத்தான சூழ்நிலைகளில் மனிதனைக் கொண்டு போய் நிறுத்திவிடும். மேலும், உபநிடதங்கள் இறைநிலையை “பிரக்ஞானம் பிரம்ம’’ (பேருணர்வே / தூய விழிப்புணர்வே பிரம்மம்) என்று வரையறுக்கின்றன. எனவே, நாம் விழிப்புணர்வோடு இருக்கும் ஒவ்வொரு கணமும் இறைநிலைக்கு நெருக்கமாகிறோம்.
சனத்குமார சம்ஹிதை போன்ற யோக தத்துவ நூல்களில் “பிரமாதோ மிருத்யுஹ்’’ என்றொரு வாசகம் உண்டு. `பிரமாதம்’ என்றால் இந்த இடத்தில் `அலட்சியம்’ அல்லது `மறதி’ என்று பொருள். ஆன்மிகத்தில் விழிப்புணர்வு இல்லாமல் இருப்பது மரணத்திற்கு ஒப்பானது என்கிறது யோக நெறி. பொதுவாகவே மனித வாழ்வில் ஒரு துன்பம் வருவதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருக்கின்றன.
முதலாவது காரணம்; நம் கண்ணுக்குத் தெரியாத, கடந்த பிறவிகளின் ‘பழவினை’ (பிராரப்தம்) காரணமாக வருவது. இரண்டாவது காரணம்; இறைவன் நமக்குக் கொடுத்த அறிவைப் பயன்படுத்தாமல், தற்காலத்தில் நாம் செய்யும் தவறான காரியங்களால் நாமே தேடிக் கொள்ளும் துன்பம். இதில் பிராரப்தமாக, அதாவது விதிவசமாக வருகின்ற வினைகளைக் கூட, தூய பிரார்த்தனையினாலும், எச்சரிக்கையோடும், ஆன்மிக விழிப்புணர்வோடும் நம்மால் தடுத்துக் கொள்ளவோ அல்லது அதன் வீரியத்தைக் குறைத்துக் கொள்ளவோ முடியும். ஆனால், எந்தவிதக் கவனமும் இல்லாமல், அலட்சியமாக, சூழ்நிலையையும் பொருட் படுத்தாமல் நாம் செய்யும் காரியங்கள் இருக்கின்றனவே, அவை விதியைவிட மிகப்பெரிய ஆபத்தை நம் தலைமேல் கொண்டு வந்து நிறுத்திவிடும். இதற்கு ஒரு எளிய உதாரணத்தைப் பார்க்கலாம். பலத்த மழை பெய்கிறது, விண்ணைப் பிளக்கும் இடி இடிக்கிறது. அந்த இடி எதிர்பாராதவிதமாக யாரோ ஒருவன் தலைமீது விழுந்து அவன் இறந்து விடுகின்றான். இது முற்றிலும் விதியின் வசத்தால் நடப்பது, இதை நம்மால் எளிதில் தடுக்க முடியாது.
ஆனால், இன்றைய விஞ்ஞானம் இடி மின்னல் வரும்போது என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்று சில எச்சரிக்கைகளைச் சொல்லி, அதிலிருந்து தப்பிக்கும் வழிமுறைகளையும் நமக்குத் தெளிவாகக் காட்டுகிறது. இத்தகைய வழிமுறைகள் விலங்குகளுக்குத் தெரியாது. ஆனால் மனிதர்களுக்குத் தெரியும். அதற்கான அறிவும், கல்வியும், விழிப்புணர்வும் மனித சமுதாயத்திற்கு வாரி வழங்கப்பட்டிருக்கின்றன. இவ்வளவு எச்சரிக்கைகள் கொடுக்கப்பட்ட பின்பும், பலத்த மழை பெய்கிறது என்று தெரிந்தே, ஒருவன் வம்படியாகப் போய் வெட்டவெளியில் மொட்டை மாடியிலோ அல்லது மரத்தின் அடியிலோ நின்று கொண்டிருக்கிறான் என்று சொன்னால், அதன் மூலம் அவனுக்கு வரும் கஷ்டம் அவன், தானாக வரவழைத்துக் கொண்ட கஷ்டம் தானே தவிர, அதில் விதியின் பங்கு என்ன இருக்கிறது?
குளம், கடற்கரை, ஆறு முதலிய இடங்களில் எச்சரிக்கைப் பலகைகள் வைத்த இடத்தில், சிலர் ஆழம் தெரியாமல் இறங்கி குளித்து நீரில் மூழ்கி போவதை என்ன என்று சொல்வது? சாலை விபத்துக்களை எடுத்துக் கொள்ளுங்கள். அதிலே 98 சதவீத விபத்துக்கள், மனிதத் தவறுகளால்தான் நடக்கின்றன. ஆபத்துகளில் இருந்து நம்மைத் தற்காத்துக் கொள்ளத் தேவையான உன்னதமான அறிவைத் தந்து, செயலாற்றும் ஆற்றலையும் தந்து, அந்தப் பேரழிவுகளைத் தடுத்துக் கொள்ளும் வழிமுறைகளையும் தந்துதான், இந்த அற்புதமான உலகத்தை நமக்கு அளித்து இருக்கின்றான் இறைவன். இறைவன் நமக்கு எல்லாவற்றையும் குறைவில்லாமல் கொடுத்திருக்கும் போது, வாழத்தெரியாமல் வாழ்ந்துவிட்டு, நாம் சுயபுத்தியின்மையால் வர வழைத்துக்கொண்ட கஷ்டங்களுக்கெல்லாம் இறைவனைக் குறை கூறுவதிலும், விதியை நொந்து கொள்வதிலும் என்ன பயன் இருக்க முடியும்? விழிப்புணர்வே வினைகளை வெல்லும் உண்மையான ஆயுதம்!

Related Stories: