பகுதி 1
249. பஞ்ச ப்ரேதா ஸநாஸீநா
250. பஞ்ச ப்ரஹ்ம ஸ்வரூபிநீ
251. சிந்மயீ
252. பரமாநந்தா
253. விஜ்ஞாந கந ரூபிணீ
* பஞ்ச ப்ரேதா ஸநாஸீநா, பஞ்ச ப்ரஹ்ம ஸ்வரூபிநீ என்ற இந்த இரண்டு நாமங்களும் ஸ்ரீ வித்யா சம்பிரதாயத்தை வெளிப்படையாக காட்டக் கூடியதாகும். கொஞ்சம் ஸ்ரீ வித்யா சம்பிரதாயத்தை தெரிந்து கொண்டால்தான் இந்த நாமங்களுக்கான பொருளையும் புரிந்து கொள்ள முடியும். இதற்கு முன்பும், இப்போது அடுத்தடுத்து வரும் நாமங்களுக்கு பக்தி, வேதாந்த, ஞான பரமான விளக்கங்கள் கொடுக்கலாம். ஆனால், இந்த நாமங்கள் முற்றிலும் ஸ்ரீ வித்யா சம்பிரதாயமாகத்தான் விளக்கங்கள் கொடுக்க முடியும்.
ஏனெனில், ஸ்ரீ வித்யாவில் அம்பிகையின் வடிவங்கள் எப்படி சொல்லப்பட்டிருக்கிறதோ, அந்த வடிவத்தை காட்டக் கூடியதுதான் இந்த இரண்டு நாமங்கள். இதற்கு முன்பு அம்பிகையின் பாதாதி கேச வர்ணனைகள் பார்த்தோம். அதில் அவளை எப்படியெல்லாம் வர்ணித்திருக்கிறார்கள் என்று பார்த்தோம். அவளின் ஸ்தானம் எப்படியிருக்கிறது என்று பார்த்தோம். ஆனால், இப்போது இந்த நாமங்களை பார்த்தால் நமக்கு திகைப்புதான் ஏற்படும். வேறெந்த தேவதா மூர்த்தங்களையாவது இப்படி சொல்லி வர்ணித்திருக்கிறார்களா என்று எண்ணத் தோன்றும் அளவிற்கு இருக்கும். அப்படியென்ன திகைக்க வைக்கக் கூடிய அம்சங்கள்.
அம்பாள் அமர்ந்திருக்கக் கூடிய சிம்மாசனத்தை கேள்விப்பட்டிருப்போம். ஆட்சிக் கட்டில் என்றும் சமஸ்கிருதத்தில் ராஜபரியங்கம் என்பார்கள். நான்கு கால்கள். அதன்மீது பலகை. பலகைக்கு மீது மெத்தை. இரண்டு பக்கங்களிலும் சிம்மங்கள். தங்கத்திலும் ரத்னங்களாலும் இழைக்கப்பட்டிருக்கும். மேலே குடையானது இருக்கும். இரண்டு பக்கமும் சாமரம் வீசுவார்கள்.
ஆனால், நாம் இங்கு பேசக் கூடியது ராஜராஜேஸ்வரியின் சிம்மாசனம். இவள் அமர்ந்திருக்கக்கூடியது சாதாரண சிம்மாசனமல்ல. அதில் யார் முதலில் அமர்ந்திருக்கிறார்கள். இந்த ராஜராஜேஸ்வரியின் சிம்மாசனத்திற்கு நான்கு கால்கள் இருக்கின்றன. இந்த நான்காகவும் யார் இருக்கிறார்களெனில், பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், மகேஸ்வரன் விளங்குகின்றனர். இந்த கால்களுக்கு மேல் பலகை இருக்கின்றதல்லவா… அதில் சதாசிவ மூர்த்தி இருக்கிறார். அந்த ஹம்ஸ பட்சியின் இறகினால் செய்யப்பட்ட ஹம்ஸ தூளிகா தல்பம் என்று சொல்லக்கூடிய அந்த மிருதுவான படுக்கையினால் ஒரு விரிப்பு இருக்கிறது. அந்த மிருதுவான விரிப்புக்கு மேலே அம்பிகை காமேஸ்வரருடைய இடது மடியில் காமேஸ்வரியாக இருக்கக் கூடிய லலிதா திரிபுரசுந்தரியானவள் அமர்ந்திருக்கிறாள்.
இந்த ஒட்டுமொத்த அமைப்பையும் நாம் அப்படியே தியானம் பண்ணிக் கொள்ள வேண்டும். இப்போது நாமத்திற்கு வருவோம். பஞ்ச ப்ரேதாஸ நாஸீநா… முதன் முறையாக இந்த நாமத்தின் அர்த்தத்தை கேட்கும்போது பயம்கூட வரலாம். ஐந்து பிரேதங்களுக்கு மேல் அமர்ந்திருப்பவள் என்று பொருள். அதாவது உயிரற்ற உடலின் மீது அமர்ந்திருப்பவள் என்று பொருள். என்ன இது. மங்களமே வடிவான லலிதா என்று சொல்கிறோம். ஆனால், பஞ்ச ப்ரேதாஸ நாஸீநா… என்று சொல்கிறார்களே என்று தோன்றும். ஆனால், நாம் சாதாரண அர்த்தத்தில் பொருளை எடுத்துக் கொள்ளக் கூடாது. இது பரம மங்களத்தை காண்பிக்கக் கூடியது. இந்த ஐந்து பேர்களால் ஆன இந்த சிம்மாசனத்தில் அதிஷ்டிதையாக…(அடிப்படையாக) ஆகிறாளோ, எப்போது அமர்கிறாளோ அப்போதுதான் இந்த ஐந்து பேருக்கும் பஞ்ச கிருத்தியங்கள் என்கிற ஐந்தொழில்கள் செய்வதற்கான சக்தியும் வருகின்றது.
பிரம்மா சிருஷ்டி – படைக்கிறார். விஷ்ணு ஸ்திதி – பரிபாலிக்கிறார். ருத்ரன் சம்ஹாரம் – அழிக்கிறார். மகேஸ்வரன் மறைத்தல் என்கிற் திரோதாண சக்தியாக இருக்கிறார். சதாசிவம் அருள் செய்கிறார். அனுக்கிரகம் பண்ணுகிறார். இந்த ஐந்தையும் உண்மையில் இவர்கள் மூலமாகவே அம்பிகை செய்கிறாள். அம்பிகை என்கிற சித் சக்தி இல்லையெனில் இந்த ஐந்து பேரும் பிரேதத்திற்கு சமமானவர்கள். ஐந்து பேரும் செயலற்றுக் கிடப்பார்கள். உடலற்ற உடம்புபோல இருப்பார்கள். ஆனால், லலிதா திரிபுரசுந்தரி இவர்களுக்கெல்லாம் மேலே அமர்ந்திருப்பதால் இந்த ஐந்து கிருத்தியங்களை செய்வதற்குண்டான தகுதியோடு இருக்கிறார்கள் என்பது இந்த நாமாவின் விஷயமாகும்.
* பஞ்ச ப்ரஹ்ம ஸ்வரூபிநீ – முதல் நாமாவில் சக்தி என்கிற செயல்பாடு இல்லாமலிருந்தால் பிரேதம்போன்று இருந்தார்கள் என்று பார்த்தோம். அம்பாள் அங்கு வெளிப்பட்டவுடன் பிரம்ம சொரூபிகள் ஆகிவிட்டார்கள். அம்பிகை தன்னுடைய ஐந்து விலாஸ சொரூபங்களாக, தன்னிடமிருந்து அம்பாளை ஐந்து பேர்களை வெளிக் காண்பிக்கிறாள். பிரம், மா, விஷ்ணு, ருத்ரன், மகேஸ்வரன், சதாசிவன் ஐந்து பேரும் பஞ்ச பிரம்மங்கள் ஆகி விடுகிறார்கள். இந்த பஞ்ச பிரம்மங்களும் அம்பிகைகளுக்குள் அடக்கம். இந்த ஐவரையும் அவள் தனக்குள் வைத்திருக்கிறாள். இந்த ஐந்தும் வேறு வேறு அல்ல. ஐவரும் என்னுடைய சொரூபங்கள். நானே இந்த ஐந்து நிலைகளிலும் செயல்படுகின்றேன். அதனால், பஞ்ச ப்ரஹ்ம ஸ்வரூபிநீ என்று வர்ணிக்கிறார்கள்.
இப்போது இந்த இரண்டு நாமங்களும் பெரிய transition ஐ காட்டிக் கொடுக்கிறது. முதல் நாமாவில் பஞ்ச ப்ரேதா ஸநாஸீநா… என்று சொல்லி விட்டு அடுத்த நாமாவில் பஞ்ச ப்ரம்ம ஸ்வரூபிநீ என்று சொல்கிறது.
இதில் சொன்ன பஞ்ச ப்ரம்ம சொரூபிநீ என்பதற்கு ஸ்ரீ வித்யா சம்பிரதாயப்படி உள்ள விளக்கத்தைப் பார்த்தோம். ஆனால், சைவ சம்பிரதாயப்படி அதற்கொரு விளக்கம் இருக்கிறது. வைஷ்ணவ சம்பிரதாயப்படியும் அதற்கொரு விளக்கம் இருக்கிறது. இதே சைவத்தில் சிவ பெருமான் ஐந்து நிலைகளில், அதாவது ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம் என்று ஐந்து நிலைகளில் வெளிப்படுத்திக் கொள்கிறார்.
அப்படியே ஸ்ரீ வைஷ்ணவத்தில், ஸ்ரீ மந் நாராயணன் தன்னை ஐந்து நிலைகளில் வெளிப்படுத்திக் கொள்கிறார். வாசுதேவ, சங்கர்ஷ்ண, ப்ரத்யும்ன, அநிருத்த என்ற நான்கு வியூக மூர்த்திகளாகவும், இதற்கெல்லாம் மேலே ஐந்தாவதாக பரவாசுதேவ மூர்த்தியாக வெளிப்படுத்திக் கொள்கிறார்.
இப்படி எல்லா சம்பிரதாயங்களிலும் பஞ்ச பிரம்ம சொரூபங்கள் விளக்கப்படுகின்றன.
இதே அம்பிகைதான் ஸ்ரீ வித்யாவிலும் சரி, சைவத்திலும் சரி, ஸ்ரீ வைஷ்ணவத்திலும் சரி பஞ்ச பிரம்மங்களாக வெளிப்படுத்திக்கொள்கிறாள். அடிப்படை விஷயம் என்னவெனில், ஒரே பிரம்மம் ஐந்தொழில்களை புரிவதற்காக தன்னை ஐந்தாக வெளிப்படுத்திக் கொள்கிறது.
ஐந்தாக வெளிப்பட்டாலும் தனித்தனி கிடையாது. இதில் இன்னொரு சூட்சுமமான விளக்கம் உள்ளது. லலிதா சஹஸ்ரநாமத்தை ஆழ்ந்து நோக்கும்போது நமக்கு ஒரு விஷயம் தெளிவாகும்.
ஒரே நேரத்தில் வேதாந்தபரமாக ஞானத்தால் அறிந்து கொண்டு வழிபடுதல் என்கிற பாதை போய்க் கொண்டே இருக்கும். அது அந்தர்முகமாக்கும்.(அகமுகமாக்கும்) அதே சமயத்தில் நம்மை அந்தர்முகமாக போக வைப்பதற்காக கிரியைகள், பூஜை முறைகள், உபாசனைகள் என்று சொல்லக்கூடிய இன்னொரு பாதையும் ஓடிக் கொண்டே இருக்கும்.
இது எப்படியெனில், ரயில் தண்டவாளங்கள்போல ஒரு பக்கம் வேதாந்த, ஞான பரமான விஷயங்கள். இதை உபநிஷத ஞான சொல்லலாம். இன்னொரு பக்கம் உபாஸனா மார்க்கங்கள் போய்க் கொண்டே இருக்கும். இதை தந்த்ரங்கள் மூலமாக சொல்லிக் கொண்டே இருக்கும்.
எனவே, முதல் நாமாவான பஞ்ச பிரேத ஸநாஸீநா…. என்பது தாந்த்ரீக பரமான ஞானத்தை உள்ளே அடக்கிக் கொண்டு தந்த்ர ரூபமாக வெளிப்படக் கூடிய நாமாவாகும். ஏனெனில், ப்ரேதாஸனம் என்பது தந்த்ரமாகும். பஞ்ச ப்ரம்ம சொரூபிநீ என்பது வேதாந்த பரமாக இருக்கின்றது.
நாம் இந்த சித்சக்தியை ஆத்ம சொரூபமாக இருக்கக்கூடிய லலிதாம்பிகையை பிடித்துக்கொண்டால் பிரேத நிலையை அடைய மாட்டோம். பிரம்ம நிலையை அடைவோம். இதை அறிந்து கொள்ளவில்லை எனில் என்ன ஆகும். இந்த உடம்பையே நான் என நினைத்துக் கொண்டால் கர்ம வசத்தால் இந்த ஜீவன் பிரியும்போது இந்த சரீரம் பிரேதமாகி விடுகின்றது.
ஆனால், ஒரு ஜீவன் லலிதாம்பிகை என்கிற ஆத்ம சொரூபத்தை பிடித்துக் கொள்ளும்போது அவன் ஞான சொரூபத்தில் நிலை கொள்கிறான். இப்போது அவனுக்கு பிரேதம் என்கிற நிலை வராது. பிரம்ம சொரூபம் என்கிற நிலை சித்திக்கிறது. நான் இந்த குறுகிய எல்லை கொண்ட நான் அல்ல. நான் பிரம்மம் என்கிற என்கிற மகா வாக்கியம் சொல்லும் பிறப்பு இறப்பற்ற எல்லைகளற்ற நிலையை எய்துகிறான்.
இந்த இரண்டு நாமங்களும் பிரேதம் என்கிற கீழான நிலையிலிருந்து பிரம்ம ஸ்திதி பிரம்ம நிலை என்கிற உயர்ந்த நிலைக்கு கொண்டுபோய் விடுகின்றது. எத்தனை பெரிய ஒரு மாற்றம் பாருங்கள். இது அம்பாளினுடைய அனுக்கிரகம். மேலான நிலையான தன்னுடைய நிலைக்கு கொண்டுபோய் சேர்க்கிறாள்.
* சிந்மயீ – இந்த மேலான நிலையை சாதகன் அடையும்போது அங்கு ஞானம் மட்டுமே இருக்கிறது. வேறு எதுவும் அங்கு கிடையாது. சிந்மயீ என்றால் ஞானமே வடிவானவள். இதுவே அம்பாளினுடைய நிலை. அந்த நிலையே இங்கு சாதகனுக்கு அம்பிகையின் பேரருளால் கிடைக்கின்றது.
* பரமாநந்தா – அப்படி ஞான மயமாக இருப்பதால் என்ன பிரயோஜனம்? சிந்மயீ என்கிற ஞான நிலையில் இந்தக் கேள்வியை கேட்க மாட்டோம். ஆனால், இப்போது நாம் இருக்கக் கூடிய நிலையில் நம்மிடம் யாராவது வந்து ஞான மயமாக இருப்பதுதான் உன்னுடைய சொரூபம் என்று யாராவது சொன்னால், நாம் அடுத்த விநாடியே, அப்படி ஞான மயமாக இருப்பதால் எனக்கு என்ன பிரயோஜனம் என்று கேட்போம்.
அதற்குத்தான் இந்த நாமாவானது பரமாநந்தா என்று ஒரு நிலையை சுட்டிக் காண்பிக்கிறது.
(சக்தி சுழலும்…)
