19.7.2026 – ஞாயிறு குமார சஷ்டி
முருகப் பெருமானுக்கு எத்தனையோ விரதங்கள் உண்டு. அதிலே சஷ்டிவிரதம் மிக உயர்வானது. அதிலும் கந்தசஷ்டி விரதம் மிக மிகச் சிறப்புடையது. இந்த கந்தசஷ்டி விரதத்தைத் தவிர, வேறு சில சஷ்டி விரதங்களும் உண்டு. அதில் ஒன்றுதான் குமாரசஷ்டி. வளர்பிறை குமார சஷ்டியைச் `சுப்பிரமணிய சஷ்டி’ என்றும், `அனந்த சுப்பிரமணிய பூஜை’ என்றும் கூறுவர்.
பக்தர்கள் இந்த நாளில் முருகப் பெருமானை முழு ஈடுபாட்டுடன் வழிபட வேண்டும். இறைவனுக்கு சந்தனம், குங்குமம், தூபம், பூ, பழங்கள் என சிறப்புப் பிரசாதம் படைக்க வேண்டும். `ஸ்கந்த சஷ்டி கவசம்’, `சுப்ரமணிய புஜங்கம்’ அல்லது `சுப்ரமணிய புராணம்’ ஆகியவற்றைப் பாராயணம் செய்வது மிகவும் மங்களகரமானது. சில பக்தர்கள் கடுமையான விரதத்தை கடைப் பிடிக்கின்றனர்.
அவர்கள் எழுந்தது முதல் மாலையில் முருகன் கோயிலுக்குச் செல்லும் வரை எதையும் சாப்பிடுவதையோ குடிப்பதையோ தவிர்ப்பார்கள். இறைவனை வழிபட்ட பின்னரே விரதம் முடியும். முருகன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் ஆரத்திகளும் நடைபெறும். இந்த விரதம் அனைத்து அசுர குணங்களிலிருந்தும் விடுவிக்கும். மனரீதியாகவும், ஆன்மிக ரீதியாகவும் ஆரோக்கியமாக இருக்க வைக்கும்.
21.7.2026 – செவ்வாய் மதுரை மீனாட்சி கிளி வாகனத்தில் ஆடிவீதி உலா
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் நடைபெறும் ஆடி முளைக்கொட்டுத் திருவிழாவின் போது, மீனாட்சி அம்மன், வெள்ளி கிளி வாகனத்தில் எழுந்தருளி நான்கு ஆடி வீதிகளிலும் உலா வருவது வழக்கம். மீனாட்சி அம்மனின் தோளில் எப்போதும் இருக்கும் கிளி, பக்தர்களின் வேண்டுதல்களை அவரிடம் கொண்டு சேர்ப்பதாக ஐதீகம் இந்தச் சிறப்பை உணர்த்தும் வகையில், இந்த பிரத்யேக கிளி வாகனம் பயன் படுத்தப்படுகிறது.
21.7.2026 – செவ்வாய் கள்ளழகர் ஆடி உற்சவம் துவக்கம்
கள்ளழகர் கோயிலில் நடைபெறும் ஒரு முக்கியத் திருவிழா ஆடி பிரம்மோற்சவம். ஆடி மாதத்தில் பத்து நாட்கள் நடைபெறும். திருவிழாவில் கள்ளழகர் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தருவார். மேலும், திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுப்பார்கள். அந்த உற்சவம் இன்று தொடக்கம். இன்று காலை கொடியேற்றம் தேர் முஹூர்த்தகால் ஊன்றுதல், இரவு பெருமாள் அன்னவாகனத்தில் உலா வருவார்.
22.7.2026 – புதன் சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை / சேரமான் பெருமாள் நாயனார் குருபூஜை
“பித்தா! பிறை சூடீ! பெருமானே!
அருளாளா!
எத்தால் மறவாதே நினைக்கின்றேன்?
மனத்து உன்னை
வைத்தாய்; பெண்ணைத் தென்பால்
வெண்ணெய் நல்லூர் அருள் – துறையுள்
அத்தா! உனக்கு ஆள் ஆய்
இனி அல்லேன் எனல் ஆமே?’’
– என்று பாடியவர் சுந்தரர்.
தம்பிரான் தோழர். பல அடியார்களின் வாழ்வு நாயன்மார்களின் வாழ்வு, சுந்தரர் வாழ்வோடு தொடர்புடையது. ஒவ்வோர் ஆண்டும் ஆடிமாதம் சுவாதி நட்சத்திரத்தில் சுந்தரரின் குருபூஜை எல்லா சிவாலயங்களிலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும். குறிப்பாக, தொண்டை மண்டலத்தில் உள்ள திருக்கச்சூர் கச்சபேஸ்வரர் ஆலயத்தில் இன்று சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் குரு பூஜைத் திருவிழா நடைபெறுகிறது. காலையில் விருந்திட்டீஸ்வரர், சுந்தரருக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனையும், மதியம் திருக்கயிலாய காட்சி வைபவமும் நடைபெற உள்ளது. இங்குதான் சுந்தரமூர்த்தி ஸ்வாமிகளுக்கு ஈஸ்வரன் அன்னமிட்டார். உலகுக்கே படியளக்கும் பரமேஸ்வரன் தனது நண்பன் சுந்தரருக்காக தானே பிட்சையெடுத்து விருந்திட்ட லீலை இங்கு நடந்தது.
தேவார மூவரில் இவர் பாடிய பாடல்கள், ஏழாம் திருமுறையாக உள்ளன. கயிலாயத்தில் ஈசனுக்குத் தொண்டராக இருந்தவர். பெருகி வந்த ஆலகால விஷத்தைத் திரட்டிக்கொடுத்து `ஆலால சுந்தரர்’ என்ற பெயரைப் பெற்றவர். பண்ருட்டி அருகே திருநாவலூரில் சடையனார் – இசை ஞானியார் தம்பதியின் மகனாகப் பிறந்து, திரு முனைப்பாடி நாட்டு அரசரான நரசிங்க முனையரையருக்கு வளர்ப்பு மகனாக வளர்ந்தவர்.
திருமணவேளையில் ஈசனால் ஆட்கொள்ளப் பட்டவர், சுந்தரர். இதே நாள் (ஆடி சுவாதி) சேரமான் பெருமாள் நாயனாருக்கும் குரு பூஜை. இவர் சேர நாட்டு மன்னன். மகோதை என்னும் ஊரில் இருந்து கொண்டு கி.பி. 871 ஆண்டுகளைச் சார்ந்து அரசாண்டவர். பெருமாக் கோதையார் என்ற இயற்பெயரும், கழற்றறிவார் என்ற சிறப்புப் பெயரும் பெற்ற இவர், 63 நாயன்மார்களில் ஒருவராகச் சேர்க்கப்பட்டபோது சேரமான் பெருமாள் நாயனார் என வழங்கப்பட்டார். இவர் சிவபூசையின்போது தில்லை நடராசப் பெருமானின் மணியோசையைக் கேட்கும் பேறு பெற்றிருந்தார் என்றும், அதனால் கழறிற்று அறிவார் எனப் போற்றப்பட்டார் என்றும் பெரிய புராணம் குறிப்பிடுகிறது.
சுந்தரர் குரு பூஜையோடு இவர் குரு பூஜையும் இணையும். சுந்தரரை நம்பி ஆரூரார் என்றும் அழைப்பார்கள். அவர் வாழ்ந்த திருவாரூரில், தியாகேசர் திருத்தலத்தில் இன்று காலை சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெறும். சுந்தரரின் உற்சவத் திருமேனிக்கு அபிஷேகங்கள் செய்யப்படும். அதையடுத்து பூக்களால் அலங்கரிக்கப்பட்டு, தீபாராதனை காட்டப்படும். இதே போல், சேரமான் நாயனாருக்கும் இன்று குருபூஜை. எனவே அவரின் உற்சவத் திருமேனிக்கும் பூஜைகள் செய்யப்படும்.
இதையடுத்து வெள்ளை யானை வாகனத்தில் சுந்தரரும், குதிரை வாகனத்தில் சேரமான் நாயனாரும் வீதியுலா வருவார்கள். நான்கு வீதிகளிலும் உலாவரும் காட்சி அற்புதமாக இருக்கும்.சென்னை மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலிலும், சுந்தரர் குருபூஜை விழா சிறப்புற நடைபெறும். இங்கேயும் உற்சவருக்கு அபிஷேக அலங்காரங்கள் செய்யப்பட்டு, வீதியுலா வைபவம் விமரிசையாக நடக்கும். மதுரை மீனாட்சியம்மன் கோயில், திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில், சங்கரன் கோவில் சங்கர நாராயணர் கோயில், திருச்சி தாயுமானவ சுவாமி கோயில், திருவையாறு ஐயாறப்பர் கோயில், கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில் முதலான பல சிவாலயங்களில் சுந்தரர் குருபூஜை கோலாகலமாக நடைபெறும்.
23.7.2026 – வியாழன் மாயவரம் குதம்பை சித்தர் குருபூஜை
சித்தர்கள் வாழ்த்த நாடு நம் நாடு. அவர்கள் மக்கள் நல்வாழ்க்கைக்காக பல அற்புதங்கள் செய்ததோடு, யோகக்கலையையும் மருத்துவக்கலையையும் வளர்த்தனர். அப்படிப்பட்ட சித்தர்களில் ஒருவர் குதம்பை சித்தர். ஆடி மாதம் விசாகம் நட்சத்திரத்தில் அவதரித்தார். இவர் வாழ்ந்த காலம் 1800 ஆண்டுகள், 16 நாள் ஆகும். குதம்பைச் சித்தரின் பாடல் கண்ணிகளில் ‘குதம்பாய்’ என்ற ஈற்று சொல் வருகின்றது.
‘குதம்பை’ என்ற காதணி அணிந்த பெண்ணை முன்னிலைப்படுத்திப் பாடுவதாலும், காதில் குதம்பை என்ற ஆபரணத்தை அணிந்திருந்ததாலும் ‘குதம்பை சித்தர்’ என்ற சிறப்புப் பெயராலேயே அழைக்கப்பட்டார். இளமையில் வாசியோகம் என்ற கலையைப் பயின்று, ஆழ்ந்த நிலையில் இறைவனை தியானிக்க, ஒரு காட்டிற்குள் புகுந்தார். அங்கிருந்த ஒரு மரப்பொந்தில் நுழைந்து, தவ நிலையில் ஆழ்ந்தார். தம் அனுபவங்களை 32 பாடல்களாகப் பாடியுள்ளார். அந்தப் பாடல்கள்தான் குதம்பைச் சித்தர் பாடல்களாக உள்ளன. மயிலாடுதுறை மாயூரநாதர்கோயிலில் சிவன் சந்நதி சுற்றுப் பிராகாரத்தில் தட்சிணாமூர்த்தி அருகில் குதம்பைச் சித்தர் ஜீவ சமாதி உள்ளது.
