ஆடி அம்மன்களின் அற்புத தரிசனம்

திருமங்கலக்குடி & மங்களநாயகி

எமனுடம் போராடி தன் கணவரின் உயிரை மீட்டாள் சாவித்ரி என்பதை படித்திருப்போம். ஆனால், இத்தலத்தில் இறைவனுடனேயே போராடி தன் கணவரின் உயிரை மீட்டிருக்கிறாள். முதலாம் குலோத்துங்கச் சோழனின் அமைச்சர் அலைவாணர் சிறந்த அம்பாள் பக்தர். மங்கலநாயகிக்கும், ஈசனுக்கு கோயில் எழுப்ப வேண்டுமென்று தவித்தார். அரசாங்க கஜானாவிலுள்ள செல்வத்தை எடுத்து ஆலயத்தை எழுப்பினார்.

அரசன் கோபங் கொண்டான். கடுமையான தண்டனைகள் விதித்தான். ஆனால், அதற்குமுன் அலைவாணர் தம் உயிரை மாய்த்துக் கொண்டார். அமைச்சரின் மனைவி அதிர்ந்தாள். ஓடிப்போய் திருமங்கலக்குடி ஈசனிடமும், அம்பிகையிடமும் அழுதாள். உறக்கத்திலிருந்து எழுவதுபோன்று எழுந்தார். ஊரே வியந்தது. உயிர் கொடுத்ததால் ஈசனுக்கு பிராணநாதேஸ்வரர் என்றும், திருமாங்கல்ய பாக்கியத்தை அளித்ததால் மங்களாம்பிகை என்று அம்பிகையை அழைத்தனர். இன்றும் இத்தலத்தில் பெண்கள் தங்கள் கணவருக்கு நீடித்த ஆயுளோடு வாழ இந்த தேவியிடமிருந்து திருமாங்கல்யச் சரடை பிரசாதமாக பெற்றுக் கொள்கிறார்கள். கும்பகோணம் & மயிலாடுதுறை நெடுஞ்சாலையில் ஆடுதுறைக்கு வடக்கே 2 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது.

திருநின்றியூர் லட்சுமிபுரீஸ்வரர்

கோச்செங்கட்சோழமனால் கட்டப்பட்ட ஆலயம் இது. மூலவரின் திருநாமமே மகாலட்சுமீஸ்வரர் என்பதாகும். தேவாதி தேவர்கள் தினம் வந்து தொழுகிறார்கள் என்பது ஐதீகம். அம்பிகையின் பெயர் லோகாம்பிகை எனும் உலகநாயகியாகும். திருமாலின் திருமார்பிலிருந்து நீங்காதிருக்கும் வரத்தை மகாலட்சுமி இத்தலத்து ஈசனை பூஜித்துப் பெற்றாள். எனவே, லட்சுமி கடாட்சம் பெற இத்தலத்தை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர். அதிலும் இந்த ஆடி வெள்ளிக்கிழமையன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

லட்சுமியின் பூரண அருள்பெற தாமரை இதழில் தேனூற்றி ஹோம அக்னியில் இட்டு யாகங்கள் செய்யப்படுகின்றன. அனுஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அவசியம் தரிசிக்க வேண்டிய கோயில் இதுவாகும். ஏனெனில், அனுஷம் நட்சத்திரத்திற்கு அதிதேவதையே மகாலட்சுமிதான். மயிலாடுதுறையிலிருந்து சீர்காழி செல்லும் பாதையில் 7வது கி.மீட்டரில் இத்தலம் உள்ளது.

கருவலூர் மாரி சுந்தரமூர்த்தி சுவாமிகள் அவிநாசித்

தலத்தில் முதலை வாயினின்று மீட்டார். உடனே மழை கொட்டித் தீர்த்தது. இவ்வாறு மேகம் கருவிலிருந்து மழை கொட்டியதால் கருவலூர் என்று அழைக்கப்பட்டது. அந்த லீலை நடந்த தொடர்புடைய ஊர் இது. கொங்கு நாட்டின் சிறப்பு பெற்ற ஊராகும். அதற்குக் காரணமே இவ்வூரில் உறையும் மாரியம்மன்தான். பெரும்பாலான அம்மன் ஆலயங்களில் அமர்ந்த கோலத்தில் அம்மன் அருள்பாலிப்பாள். ஆனால், இங்கோ பராசக்தி நின்றருளும் கோலத்தில் காட்சிதருகிறாள். மாரியம்மனை பொதுவாக மாரியாத்தா என்போம்.

அப்படி தாயாக இருப்பவள் இத்தலத்தில் சேயாக அழகு காட்டுகிறாள். தான் குடிகொண்டிருக்கும் கோயிலுக்குத் தேவையான புனரமைப்புகளை கனவில் தோன்றியே நிறைவேற்றிக்கொண்டிருக்கிறாள். குழந்தைபோல இருக்கும் இந்த மாரி தட்டாது குழந்தை பாக்கியத்தை அளிக்கிறாள். திருப்பூரிலிருந்து கருவலூர் 25 கி.மீ. தொலைவில் உள்ளது. அவிநாசியிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் பேருந்துகளிலும் செல்லலாம்.

தர்மபுரி கல்யாண காமாட்சி

மாங்காட்டில் தீப்பிழம்பின் மத்தியில் தவக்கோலத்தில் பொலிந்தவள், தஞ்சையில் பங்காரு காமாட்சியாக பிரமிப்பூட்டுகிறாள். காஞ்சியில் பேரமைதி தவழும் யோகநாயகியாக இருப்பவள் தர்மபுரியில் கல்யாண காமாட்சியாக அருட்கோலம் காட்டுகிறாள். ராவண வதம் முடிந்ததும் ராமர் ராமேஸ்வரத்தில் ஈசனை பிரதிஷ்டை செய்து நெஞ்சின் தணலை ஆற்றிக் கொண்டார். ஆனாலும், அகத்தியரிடம் என்ன செய்தாலும் பிரம்மஹத்தி தோஷம் வருமே என்று கேட்டார்.

அகத்தியர் காமாட்சியின் மகாத்மியத்தை உரைத்தார். தகடூர் எனும் இத்தலத்தில் கல்யாண காமாட்சியாக அருள்பாலிப்பதையும் விவரித்தார். ஸ்ரீ ராமரும் இத்தல அன்னையை தரிசித்தார். அன்னை, இங்கு போக காமாட்சியாக அருள் பெருக்கி அமர்ந்திருக்கிறாள். பதினெட்டு யானைகள் தாங்கிய தேர் போன்ற அமைப்பில் விளங்குகிறது, அன்னையின் சந்நதி. ஸ்ரீ சக்ர மேடையின் மீது நின்றருளுகிறாள். சூலினி துர்க்கையும்தனிச் சந்நதியில் ஜொலிக்கிறாள். தர்மபுரி பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது.

தேக்கம்பட்டி வனபத்ரகாளி

கோவையில் ராஜநாகம்போல வளைந்து நெளிந்து கம்பீரமாக கிடக்கும் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்திலுள்ள தேக்கப்பட்டியின் எல்லையில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. பண்டைய காலத்தில் இக்கோயிலின் அருகே நெல்லூர் பட்டினம் எனும் நகரமே இருந்தது. ஆரவல்லி, சூரவல்லி என்று எழு சகோதரிகள் ஆண்டு வந்தனர். ஆண்களை கண்டாலே சிறையில் அடைத்து கொடுமைப்படுத்துவர். பஞ்ச பாண்டவர்கள் மூலம் அவர்களின் கொட்டம் அடக்கப்பட்டது.

பஞ்சபாண்டவர்கள் அவர்களை வெல்வதற்காக இங்குள்ள வனபத்ரகாளியிடம்தான் வேண்டிக் கொண்டு சென்றனர். அதேபோல பகாசுரன் எனும் அரக்கனை பீமன் கொல்வதற்கு முன்பு இந்த காளியின் பாதம் பணிந்துதான் சென்றானாம். பகாசுரன் தன் உயிர் கரைவதற்கு முன்பு உன் சந்நதியின் முன்பு நான் எப்போதும் இருக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டானாம். அதனால் இன்று பகாசுரன் வனபத்ரகாளியின் முன்பு குடிகொண்டிருக்கிறான். வனபத்ரகாளியின் கழுத்தில் சாற்றிய எலுமிச்சைப்பழங்கள்தான் நோய் தீர்க்கும் மருந்தாக இருக்கிறது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்திலிருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் மேற்கே இத்தலம் அமைந்துள்ளது.

கருவம்பாக்கம் முத்தாலம்மன்

திண்டிவனம் மற்றும் அதைச்சுற்றியுள்ள பல நூறு கிராமங்களில் இருப்போரின் இஷ்ட தெய்வமாக இவள் விளங்குகிறாள். பதினாறாம் நூற்றாண்டு கால ஆலயம் இது. அதற்கு முன்பு இதே ஊரின் எல்லையிலேயே ஏகாம்பரேஸ்வரர் எனும் சிவாலயம் இருந்ததற்கான தடயங்கள் அடையாளங் காணப்பட்டன. அப்போதெல்லாம் அதுதான் ஊராக இருந்ததாம். பெரும் வெள்ளத்தில் ஊரே மூழ்க மெல்ல கோயிலும் சிதைந்தது. அதற்குப் பிறகுதான் புதியதாக ஊரை நிர்மாணம் செய்து இந்த முத்தாலம்மன் கோயிலை கட்டினர்.

அம்மனோடு கணபதியும், நாகர்சிலையையும் பிரதிஷ்டை செய்தனர். அக்காலத்தில் எந்த விஷயமானாலும் சரிதான், முதலில் அம்மனுக்கு அலங்காரம் செய்து, நாகத்தின் மீது எலுமிச்சைப்பழம் வைத்து உத்தரவு கேட்பார்களாம். நல்ல உத்தரவு எனில் முன் பக்கமாக வந்து விழும். இல்லையெனில் பின்புறமாக விழும். அம்மனுக்கு எதிரே உட்கார்ந்து கேட்போரின் மடியில்கூட விழுமாம். நூறு வருடங்களுக்கு முன்பு இவளே மகாசக்தி என பல பக்தர்கள் உபாசித்து வந்தார்களாம்.

இன்றும் இத்தலத்தில் முத்தாலம்மா… பையனுக்கு சரியான வேலையே கிடைக்கலை…. வேலைக்கும் போகமாட்டேங்கறான்…. என்று வேண்டிக்கொண்ட அடுத்த மாதத்திலேயே கைநிறைய ஊதியத்தோடு முத்தாலம்மனுக்கு நன்றியோடு அபிஷேகத்திற்கு தருவதை இங்கு சகஜமாகக் காணலாம். திண்டிவனம்&வந்தவாசி சாலையில் கோவிந்தாபுரம் என்கிற ஊரிலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது.

கிடாத்தலை மேடு துர்க்கை

மகிஷாசூரன் பூலோக மக்களை கொடுமைப்படுத்தி வந்தான். மக்களை காக்க அவனை வதைத்தாள் துர்க்கை. அப்படி வதைக்கும்போது எருமைத் தலையனான மகிஷாசூரனின் தலை விழுந்த இடம்தான் கிடாத்தலை மேடு என்று ஆன்றோர்கள் கூறுகிறார்கள். அதனாலேயே இத்தலத்தை மகிஷசிரோன்னபுரம் என்றழைக்கிறார்கள். இந்த ஆலயத்தில்தான் துர்க்கா தேவிக்கு மூலவருக்கு இணையான தனிச் சந்நதி அமைந்துள்ளது. கிடாத் தலையான எருமையின் தலையை கொண்ட மகிஷனின் தலையை அழுத்தும் கோலத்தில் நின்ற வண்ணம் காட்சி தருகிறாள். துர்க்கைக்கு முன்னால் ஸ்ரீசக்ர பூர்ண மகாமேரு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

அரக்கனே ஆனாலும் மகிஷனை வதைத்தது பாவம்தான். எனவே துர்க்கையே தனக்கு ஏற்பட்ட வீரகத்தி தோஷம் நீங்குவதற்காக இத்தலத்து சிவனை வழிபட்டாள். எனவே ஈசனுக்கு துர்க்காபுரீஸ்வரர் என்கிற திருப்பெயர் ஏற்பட்டது. தோல்வியில் துவண்டோரும் வெற்றி வேண்டும் என்போரும் மறக்காது துர்க்கையை தரிசியுங்கள். மயிலாடுதுறைக்கு வட மேற்கிலும் திருமணஞ்சேரிக்கு வடக்கிலும் சுமார் 3 கி.மீ. தூரத்தில் இத்தலம் உள்ளது.

Related Stories: