சென்னை: பாமக தலைவர் அன்புமணி நேற்று விமானத்தில் சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றார். முன்னதாக அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: நீட் தேர்வை கண்டித்து தான் டெல்லியில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் மாணவர்கள் அல்லாதவர்கள் ஊடுருவி போராட்டத்தை வேறுவிதமாக திசை திருப்பியதால் இந்த அசம்பாவித சம்பவம் நடந்துள்ளது.
மேகதாது அணையை எதிர்த்து, தமிழகத்தின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து டெல்லி நாடாளுமன்ற வளாகத்துக்குள் போராட்டம் நடத்த தயங்க கூடாது. முதலமைச்சர் அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்டி, அனைத்து கட்சி பிரதிநிதிகளையும் டெல்லிக்கு அழைத்துச் சென்று, பிரதமர், நீர்வளத்துறை அமைச்சர் ஆகியோரை சந்தித்து அழுத்தம் கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
இந்த ஆண்டு கோடை கடுமையாக உள்ளது. சூப்பர் எல்நினோ என்று கூறுகின்றனர். எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, தமிழ்நாடு அரசு நிவாரணம் கொடுக்க வேண்டும். விவசாயிகளின் கூட்டுறவு வங்கி கடன்களை அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். அதில் சிறு, குறு விவசாயி என்று வேறுபாடு பார்க்க கூடாது.
* நெல் கொள்முதலில் தொடரும் கையூட்டு
தமிழ்நாடு முழுவதும், குறிப்பாக காவிரி பாசன மாவட்டங்களில் கோடை பருவ அறுவடை தீவிரமடைந்துள்ள நிலையில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் உழவர்களிடமிருந்து குவிண்டாலுக்கு ரூ.325 வரை கட்டாயமாகக் கையூட்டு பறிக்கப்படும் கொடுமை இன்னும் தொடர்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. உணவு அமைச்சர் மேற்கொண்ட கள ஆய்விலேயே கையூட்டு வசூலிக்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அதை தடுக்க அரசுத் தரப்பில் உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படாதது கவலையளிக்கிறது.
காவிரி பாசன மாவட்டங்களில் 1.60 லட்சம் ஏக்கரில் கோடை பருவ நெல் சாகுபடி செய்யப்பட்டிருக்கிறது. விளைந்த நெற்பயிர்களை அறுவடை செய்யும் பணி தீவிரமடைந்திருக்கும் நிலையில், அறுவடை செய்யப்பட்ட நெல்லை விற்பனை செய்வது தான் உழவர்களுக்கு பெரும் துயரமாக மாறியிருக்கிறது. ஒருபுறம் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேங்கிக் கிடப்பதால், உழவர்கள் தங்களின் நெல்லை விற்பனை செய்வதற்கு ஒரு வாரம் வரை காத்திருக்க வேண்டியுள்ளது.
இன்னொருபுறம் கொள்முதல் நிலையங்களில் ஊழல் தொடர்கிறது. நெல் கொள்முதல் நிலைய கையூட்டு கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும் என்ற உழவர்களின் விருப்பத்தை அரசு நிறைவேற்ற வேண்டும். இனியும் தாமதிக்காமல் கொள்முதல் நிலைய சுரண்டல்களை தடுத்து, உழவர்களிடமிருந்து கையூட்டு இல்லாமல் உடனுக்குடன் நெல் வாங்கப்படுவதை அரசு உறுதி செய்யவேண்டும் என அன்புமணி தெரிவித்துள்ளார்.
