திருமலை: காக்கிநாடா துறைமுகத்தில் நடந்த படப்பிடிப்பின்போது நடிகர் பாலகிருஷ்ணா வழுக்கி விழுந்து காயமடைந்தார். தெலுங்கு திரைப்பட முன்னணி நடிகரும், எம்எல்ஏவுமான பாலகிருஷ்ணா சமீபத்தில் ‘வீரசிம்ம ரெட்டி’ என்ற ஒரு பிளாக்பஸ்டர் வெற்றியை கொடுத்தார். இப்படத்தை இயக்கிய கோபிசந்த் மலினேனி கூட்டணியில் 2வது படமாக என்பிகே111 என்ற படத்தில் பாலகிருஷ்ணா தற்போது நடித்து வருகிறார்.
மிகவும் பிரமாண்டமான ஆக்ஷன் என்டர்டெய்னர் படத்திற்காக, காக்கிநாடா துறைமுகத்தில் சில முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நேற்றைய படப்பிடிப்பின் போது, பாலகிருஷ்ணா எதிர்பாராதவிதமாக வழுக்கி விழுந்தார். இதில், அவரது முழங்காலில் லேசான காயம் ஏற்பட்டது. படக்குழுவினர் உடனடியாக படப்பிடிப்பை நிறுத்தி, அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
மருத்துவமனையில் உள்ள டாக்டர்கள் பாலகிருஷ்ணாவுக்கு அடிப்படை சிகிச்சை அளித்து, பிற மருத்துவப் பரிசோதனைகளையும் மேற்கொண்டனர். அதில் காயம் சிறியது என்றும், கவலைப்படத் தேவையில்லை எனவும், அவர் சில நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும் என டாக்டர்கள் தெரிவித்தனர். அவர் விரைவில் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது.
