மேற்காசிய நாடுகளில் மீண்டும் போர் பதற்றம்: சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டு விமான சேவை பாதிப்பு

மீனம்பாக்கம்: மேற்காசிய நாடுகளில் மீண்டும் போர் பதற்றம் அதிகரித்துள்ளதால், பக்ரைன், குவைத் உள்ளிட்ட பகுதிகளில் அவ்வப்போது வான்வெளி பாதுகாப்பு காரணமாக மூடப்படுவதால் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அபுதாபி, துபாய், பக்ரைன், குவைத், சார்ஜா உள்ளிட்ட ஐக்கிய அரபு நாடுகளில் இருந்து சென்னை வரும் விமானங்களும், அந்த வான்வழிகளை கடந்து வரும் மற்ற நாட்டு விமான சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளதால் சென்னை விமானநிலையத்தில் வெளிநாட்டு விமான சேவை தாமதம், ரத்து ஆகியுள்ளன.

மேலும் அபுதாபி, துபாய், சார்ஜா, பக்ரைன், மஸ்கட், லண்டன், சிங்கப்பூர், ஆகிய இடங்களில் இருந்து சென்னைக்கு வரும் 10 பயணிகள் விமானங்கள், தாமதமாக சென்னைக்கு வந்து சேர்வதால், சென்னையில் இருந்து அந்த நாடுகளுக்கு புறப்படும் விமானங்களும் தாமதமாக புறப்பட்டு செல்கின்றன. அபுதாபி, துபாய், சார்ஜா, மஸ்கட், சிங்கப்பூர், லண்டன் உள்ளிட்ட 10 இடங்களுக்கு நேற்று நள்ளிரவில் இருந்து இன்று காலை வரை புறப்பட்டு செல்லவேண்டிய 10 பயணிகள் விமானங்கள் 30 நிமிடங்களில் இருந்து 3 மணி நேரம் வரை தாமதமாக சென்னையில் இருந்து புறப்பட்டு சென்றன.

இதுபோல் இன்று மாலை 3 மணிக்கு இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து சென்னைக்கு வரவேண்டிய லங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், மாலை 4 மணிக்கு சென்னையில் இருந்து கொழும்பு புறப்பட்டு செல்லவேண்டிய லங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் என 2 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. விமானங்கள் தாமதம் அல்லது ரத்து என்ற நிலை ஏற்பட்டால், பயணிகளுக்கு முன்னதாகவே அறிவிப்பு செய்யப்படுவதோடு டுவிட்டரில் சென்னை விமானநிலைய அதிகாரிகள் தகவல் தெரிவிப்பார்கள்.

இதை பார்த்துவிட்டு பயணிகள் தங்கள் பயணம் செய்யவேண்டிய விமான நிறுவனங்களுடன் தொடர்புகொண்டு பயணிக்கும் விமானங்கள் எப்போது சென்னைக்கு வரும், சென்னையில் இருந்து எப்போது புறப்பட்டு செல்லும் என்பதை தெரிந்துகொண்டு அதற்கு தகுந்தாற்போல் பயண திட்டத்தை வகுத்து கொள்வார்கள். இப்போது, சென்னை விமான நிலைய அதிகாரிகள், விமானங்கள் தாமதம், ரத்து குறித்து எந்த தகவலும் பயணிகளுக்கு தெரிவிக்கவில்லை. இதனால் பயணிகள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.

Related Stories: