சென்னை: தமிழகத்தில் நெல் கொள்முதலில் கையூட்டு தொடருகிறது என பாமக தலைவர் அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு முழுவதும், குறிப்பாக காவிரி பாசன மாவட்டங்களில் கோடை பருவ அறுவடை தீவிரமடைந்துள்ள நிலையில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் உழவர்களிடமிருந்து குவிண்டாலுக்கு ரூ.325 வரை கட்டாயமாகக் கையூட்டு பறிக்கப்படும் கொடுமை இன்னும் தொடர்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. உணவு அமைச்சர் மேற்கொண்ட கள ஆய்விலேயே கையூட்டு வசூலிக்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அதைத் தடுக்க அரசுத் தரப்பில் உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படாதது கவலையளிக்கிறது.
காவிரி பாசன மாவட்டங்களில் 1.60 லட்சம் ஏக்கரில் கோடை பருவ நெல் சாகுபடி செய்யப்பட்டிருக்கிறது. விளைந்த நெற்பயிர்களை அறுவடை செய்யும் பணி தீவிரமடைந்திருக்கும் நிலையில், அறுவடை செய்யப்பட்ட நெல்லை விற்பனை செய்வது தான் உழவர்களுக்கு பெரும் துயரமாக மாறியிருக்கிறது. ஒருபுறம் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேங்கிக் கிடப்பதால், உழவர்கள் தங்களின் நெல்லை விற்பனை செய்வதற்கு ஒரு வாரம் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. இன்னொருபுறம் கொள்முதல் நிலையங்களில் ஊழல் தொடர்கிறது.
நெல் கொள்முதல் நிலைய கையூட்டு கலாசாரத்தை ஒழிக்க வேண்டும் என்ற உழவர்களின் விருப்பத்தை அரசு நிறைவேற்ற வேண்டும். இனியும் தாமதிக்காமல் கொள்முதல் நிலைய சுரண்டல்களை தடுத்து, உழவர்களிடமிருந்து கையூட்டு இல்லாமல் உடனுக்குடன் நெல் வாங்கப்படுவதை அரசு உறுதி செய்யவேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
