முத்துப்பேட்டை, ஜூலை 21: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த மாங்குடி பள்ளிக்கூடத் தெருவைச் சேர்ந்த அருள்தாஸ், மதுபாலா தம்பதியினர் விவசாய கூலித் தொழிலாளர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இதில் மனைவி மதுபாலா மாற்றுத்திறனாளி ஆவார். இந்த நிலையில் கணவர் அருள்தாஸ் வேலைக்காக வெளியூர் சென்றிருந்த நிலையில், மதுபாலா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது திடீரென வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. இதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றனர்.
ஆனால் பலத்த காற்று வீசியதால் தீ மளமளவென்று வேகமாக பரவி கொழுந்துவிட்டு எரிந்து கூரை வீடு முழுவதுமாக சேதமானது, வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் கருகி நாசமானது, அப்போது வீட்டிற்குள் சிக்கியிருந்த மதுபாலாவை அப்பகுதி மக்கள் விரைவாக உள்ளே புகுந்து மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இருப்பினும், அவரது கை மற்றும் முகத்தில் தீக்காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும் இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள கட்டில் பீரோ பிரிட்ஜ் பாத்திரங்கள், அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் தீயில் எரிந்து சேதமடைந்தன. இதில் குறிப்பாக ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, டிவி, குழந்தைகள் சான்றிதழ் உட்பட முக்கிய ஆவணங்கள் தீயில் கருகி சாம்பலானது. இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
