தேவாலயங்களில் பணிபுரியும் பணியாளர்கள் நலத்திட்ட உதவிகள்பெற விண்ணப்பிக்கலாம்: பெரம்பலூர் கலெக்டர் தகவல்

பெரம்பலூர்,ஜூலை 21: பெரம்பலூர் மாவட்டத்தில் கிறிஸ்தவ உபதேசியர்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் நலத்திட்ட உதவிகள் பெற இணையவழி சேவை மூலம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் ஷரண்யா அறி தகவல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது :
பெரம்பலூர் மாவட்டத்தில் கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியர்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் விபத்து ஈட்டுறுதி திட்டத்தின் கீழ் உதவித்தொகை, இயற்கை மரணத்திற்கான உதவித் தொகை, ஈமச்சடங்கு செலவிற்கான உதவித் தொகை, கல்வி உதவித் தொகை, திருமண உதவித் தொகை, மகப்பேறு உதவித் தொகை, மூக்குக் கண்ணாடி செலவுத்தொகை ஈடுசெய்தல், முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நலத்திட்ட உதவிகள் பெற விரும்பும் நபர்கள் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும், 18 முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும், கிறிஸ்தவ தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியர்கள், வேதியர்கள், சீஷப் பிள்ளைகள், பாடகர்கள், கல்லறை பணியாளர்கள், கிறிஸ்தவ அனாதை இல்லங்கள், தொழுநோயாளியர் மறுவாழ்வு இல்லங்களின் பணியாளர்கள் ஆகியோருக்கு முறையான மாதாந்திர ஊதியம் என்று இல்லாமல் பணிபுரிகின்ற பணியாளர்கள் இந்த வாரியத்தில் தங்களை உறுப்பினராகப் பதிவுசெய்து நலத்திட்ட உதவிகளைப் பெற தகுதி பெறுகின்றனர்.

மேற்படி, நல வாரியத்தில் உறுப்பினராக பதிவுசெய்தல், நலத்திட்ட உதவிகள் பெறுதலை எளிதாக்கும் வகையில் பிரத்யேக இணைய தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் www.cwb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்து பயன் பெறலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்டக் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். எனவே, பெரம்பலூர் மாவட்டத்தில் கிறிஸ்தவ தேவாலயங்களில் பணி புரியும் உபதேசியர்கள் மற்றும் பணியாளர்கள், நல வாரியத்தில் உறுப்பினர்களாக விண்ணப்பித்து பயன் பெறலாம் என மாவட்டக் கலெக்டர் வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

Related Stories: