×

பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்த RBI தீவிரம்..! சர்வதேச நிறுவனங்களுக்கு அழைப்பு…

டெல்லி: இந்தியாவில் பிளாஸ்டிக் (பாலிமர்) ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்வதற்கான முதற்கட்ட பணிகளை இந்திய ரிசர்வ் வங்கி தொடங்கியுள்ளது. காகிதத்திற்குப் பதிலாக நீடித்து உழைக்கும் பிரத்யேக பாலிமர் தாள்களை வழங்க சர்வதேச நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கியின் நோட்டு அச்சிடும் பிரிவு அழைப்பு விடுத்து உள்ளது.

இதற்காக சர்வதேச நிறுவனங்களிடம், சர்வதேச ஒப்பந்தப்புள்ளிகள் (EOI) கோரப்பட்டுள்ளன. நீடித்து உழைக்கும் பிரத்யேக பாலிமர் தாள்களை சப்ளை செய்வதற்காக விண்ணப்பிக்க ஆகஸ்ட் 18 கடைசி நாள் என ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது. பணத்தாள்களை அச்சிடுவதற்குப் பயன்படும் ஒரு சிறப்பு வகையான ‘பாலிமர் சப்ஸ்ட்ரேட் ஷீட்’ (polymer substrate sheet) உற்பத்தி செய்து வழங்க இந்த டெண்டர் கோரப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வ வட்டாரங்களிலிருந்து கிடைத்துள்ள தகவல்களின்படி, முதலில் ரூ.10 மற்றும் ரூ.20 மதிப்புள்ள சிறிய மதிப்புடைய நோட்டுகளை அச்சடிப்பதன் மூலம் இந்த முன்னோடித் திட்டம் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது முதற்கட்டமாக ரூ.10 மற்றும் ரூ.20 நோட்டுகளை காகிதத்திற்குப் பதிலாக நீடித்து உழைக்கும் பிரத்யேக பாலிமர் தாள்களை கொண்டு அச்சடித்து சோதனை செய்யப்படவுள்ளது.

இந்தச் சோதனையின் முடிவுகள் மற்றும் அனுபவங்களின் அடிப்படையில் ரிசர்வ் வங்கி அடுத்தகட்ட முடிவுகளை எடுக்கும். இந்த சோதனை முழுமையான வெற்றி பெற்றால், 2027-ஆம் ஆண்டு முதல் நாடு முழுவதும் பாலிமர் ரூபாய் நோட்டுகளை முழு அளவில் அறிமுகம் செய்யும் நடவடிக்கையை ரிசர்வ் வங்கி தொடங்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Tags : RBI ,Delhi ,Reserve Bank of India ,India ,Reserve Bank ,Printing Division ,
× RELATED CBSE 2026-ஆம் ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு...