சென்னை: தமிழகத்தில் கோடைகாலம் முடிந்தும் வெயில் வாட்டி எடுத்து வருகிறது. இன்று 4 மாவட்டங்களில் வெப்ப அலை வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை கோடை காலம் மார்ச் மாதம் தொடங்கி சுட்டெரிக்கும். குறிப்பாக ஏப்ரல், மே மாதங்களில் வெயிலின் தாக்கம் என்பது மேலும் அதிகரிப்பது வழக்கம். இந்தாண்டு மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் பல இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி சுட்டெரித்தது. அதிகப்பட்சமாக வேலூரில் 108 டிகிரியை தாண்டி வெயில் சுட்டெரித்தது.
மேலும் பல இடங்களில் 105 டிகிரி வரை வெயிலின் தாக்கம் என்பது இருந்தது. இதனால், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். தேவையில்லாமல் வெளியில் செல்வதை தவிர்த்து வீடுகளுக்கு உள்ளேயே முடங்கினர். பொதுவாக ஜூன், ஜூலை மாதங்களில் படிப்படியாக வெயிலின் தாக்கம் குறையும். ஆனால் இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் தொடங்கிய வெயில் இதுவரையில் சுட்டெரித்து வருகிறது. வெயிலின் தாக்கம் என்பது குறைந்தபாடில்லை. கோடைக்காலத்தில் சுட்டெரிப்பதை போல வெயில் வாட்டி எடுத்து வருகிறது.
காலை 9 மணிக்கு மேல் வெளியில் தலைக்காட்ட முடியாத அளவுக்கு வெயிலின் உக்கிரம் என்பது அதிகமாக இருந்து வருகிறது. அதே நேரத்தில் கடந்த சில வாரமாக வெயிலின் தாக்கம் என்பது வழக்கத்தை விட 2 டிகிரி முதல் 4 டிகிரி வரை சுட்டெரித்து வருகிறது. இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் நேற்று திருவள்ளூர், மதுரை, கரூர், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் வெப்ப அலை வீசியது.
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை பெரும்பாலான இடங்களில் இயல்பிலிருந்து 2 முதல் 6 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்து இருந்தது. இதனால், இந்த பகுதிகளில் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இன்றும் தமிழகத்தில் வெப்பம் இயல்பை விட 4 டிகிரி வரை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு:
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வடக்கு கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.
நாளை மற்றும் நாளை மறுநாள் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-4 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
நாளை முதல் 20ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கக்கூடும். இன்று அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில் கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் வெப்பம் சார்ந்த அசவுகரியம் ஏற்படலாம். இன்று கரூர், ஈரோடு, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை, இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான, மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். மதியம்/ மாலை நேரங்களில் வெப்பம் சார்ந்த அசவுகரியம் ஏற்படக்கூடும்.
இன்று தெற்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், வடக்கு வங்கக்கடல் பகுதிகளை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
