மதுரை: கரூரில் சோதனைக்கு வந்த வருமான வரித்துறை அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் மீது கரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர் முன்ஜாமீன் கோரி ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம், சனிக்கிழமைதோறும் 4 வாரம் கரூர் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கியது.
இதுதொடர்பாக அசோக்குமார் ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘வேறொரு வழக்கில் சென்னை, திருவல்லிக்கேணி காவல் நிலைய வழக்கில் மறு உத்தரவு வரும் வரை தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கரூர் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையை நிறைவேற்றுவது கடினமாக உள்ளது.
எனவே, சனிக்கிழமைகளில் கரூர் நகர காவல் நிலையத்தில் ஆஜராவதற்குப் பதிலாக, சென்னை, திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராக எனக்கு அனுமதி அளிக்க வேண்டும்’’ என கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி ராஜசேகர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து நீதிபதி, நான்கு வாரத்திற்கு ஒவ்வொரு சனிக்கிழமையும் கரூர் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராவதற்கு பதிலாக, சென்னை, திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகுமாறு நிபந்தனையை மாற்றி அமைத்து உத்தரவிட்டார்.
