சென்னை: சென்னை மாநகராட்சியில் லஞ்சம் வாங்குதல், போலி பில்கள் மூலம் நிதி மோசடி மற்றும் வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றுதல் போன்ற கடுமையான புகார்களின் அடிப்படையில், 4 மூத்த அதிகாரிகள் உள்பட மொத்தம் 6 பணியாளர்களை அதிரடியாக சஸ்பெண்ட் செய்து மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ்.சமீரன் உத்தரவிட்டுள்ளார். இந்த அதிகாரிகள் அனைவரையும் பணியில் இருந்து நிரந்தரமாக நீக்குவதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதுடன், 4 அதிகாரிகள் மீது குற்றவியல் வழக்குகளும் பதிவு செய்யப்படவுள்ளன.
அதன்படி, தேவிகா (மண்டல சுகாதார அதிகாரி, மணலி மற்றும் மாதவரம்) கடந்த 2025-26ம் நிதியாண்டில் சுமார் ரூ.9 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை வாங்கியதாகக் கூறி, போலி பில்களை சமர்ப்பித்து நிதி மோசடி செய்ததாக இவர் மீது உள்வட்டார விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டது. இதனையடுத்து ஜூலை 9 அன்று இவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
சிவ பொற்கொடி (மூத்த பூச்சியியல் வல்லுநர், ஷெனாய் நகர் மத்திய மண்டல அலுவலகம்) சென்னை மாநகராட்சியில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி இளைஞர் ஒருவரிடம் ரூ.6 லட்சம் லஞ்சம் வாங்கிய புகாரில் இவர் ஜூலை 11 அன்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பணி நீக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனந்தராவ் (உதவி செயற்பொறியாளர், மாதவரம் மண்டலம்) கட்டிட உரிமையாளர் ஒருவரிடம் அவரது கட்டிட அனுமதி தொடர்பான பணிகளுக்காக ரூ.2.5 லட்சம் லஞ்சம் கோரிய புகாரில் இவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பாஸ்கர் (சாலைப் பணியாளர், கோடம்பாக்கம்) அங்கீகரிக்கப்பட்ட அனுமதி பெற்ற கட்டிட உரிமையாளரை, கட்டிடத்திற்கு சீல் வைக்கப் போவதாக மிரட்டி ரூ.50,000 லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக ஜூலை 10 அன்று இவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். துர்கா (பில் கிளார்க்) மற்றும் அவரது கணவர் கண்ணன் (ஊழியர்) ராயபுரம் மண்டலத்தின் இயந்திர பொறியியல் துறையில் ஒப்பந்ததாரர் ஒருவரின் பில்களை பாஸ் செய்வதற்கு லஞ்சம் கோரிய புகாரில் இந்த இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இதுதவிர, லஞ்ச ஒழிப்புத்துறையினர் மாநகராட்சி அலுவலகங்களில் நடத்திய திடீர் சோதனையில், கணக்கில் வராத ரூ.5,000 மற்றும் அதற்கு மேற்பட்ட ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதற்கு முறையான விளக்கம் அளிக்காத காரணத்தால், மேலும் 4 அதிகாரிகள் மீது தற்போது மாநகராட்சி நிர்வாகம் தனியாக விசாரணையை தொடங்கியுள்ளது. அவர்கள் மீதும் விரைவில் நடவடிக்கை பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வழக்கமாக தவறு செய்யும் அதிகாரிகள் சஸ்பெண்ட் மட்டுமே செய்யப்படுவார்கள். ஆனால், தற்போது நாங்கள் அவர்களை பணியில் இருந்தே நிரந்தரமாக நீக்குவதற்கான கடுமையான நடவடிக்கையை எடுத்துள்ளோம். மாநகராட்சியில் யாரேனும் லஞ்சம் கேட்டால் பொதுமக்கள் நேரடியாக எனது கவனத்திற்கு கொண்டு வரலாம். ஊழலுக்கு எதிராக எவ்வித சமரசமும் இன்றி கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் தெரிவித்துள்ளார்.
