ரூ.100 கோடி நிலத்தை ரூ.2 கோடிக்கு முறைகேடாக பதிந்த விவகாரம் பழநி மலைக்கோயில், சார்பதிவாளர் அலுவலகங்களில் சிபிசிஐடி விசாரணை: 4 பேர் மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு

பழநி: முறைகேடாக ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில் சிபிசிஐடி போலீசார், பழநி மலைக்கோயில் தலைமை அலுவலகம், சார் பதிவாளர் அலுவலகத்தில் விசாரணை நடத்தினர். மேலும், 4 பேர் மீதும் 7 பிரிவுகளில் வழக்கு பதிந்ததோடு, நிலம் தொடர்பான ஆவணங்களையும் பெற்றனர். திண்டுக்கல் மாவட்டம் பழநி அடிவாரம், ஆண்டவன் பூங்கா சாலையில் தண்டபாணி சுவாமிகள் மடத்திற்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 1.40 ஏக்கர் இடம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் வாகன நிறுத்துமிடமாக உள்ளது.

இந்த நிலத்தை முருகதாஸ் என்பவர் சேதுபதி மற்றும் வெள்ளைத்துரை ஆகியோருக்கு கடந்த 6ம் தேதி ரூ.2 கோடிக்கு முறைகேடாக பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளார். இவ்விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததைத் தொடர்ந்து, பழநி கோயில் நிர்வாகம் கொடுத்த புகாரின் அடிப்படையில், சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், நிலத்தை கிரையம் செய்து கொடுத்த முருகதாஸ், கிரையம் பெற்ற வெள்ளைத்துரை மற்றும் சேதுபதி ஆகிய 4 பேர் மீது அடிவாரம் போலீசார் 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

இதனைத்தொடர்ந்து துறைரீதியான நடவடிக்கையாக சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மற்றும் மாவட்ட பதிவாளர் சசிகலா ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதுதொடர்பாக ஐகோர்ட் கிளையில் செய்யப்பட்ட மேல்முறையீடு வழக்கில் நேற்று முன்தினம் பத்திரப்பதிவு ரத்து செய்யப்பட்டது. தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த வழக்கு தற்போது சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடி டிஎஸ்பி அஜய் தங்கம், இஸ்பெக்டர் சந்தானலட்சுமி தலைமையிலான போலீசார் மேற்கொண்டுள்ளனர்.

திண்டுக்கல்லில், இந்த வழக்கின் ஆவணங்கள், கோயில் நிர்வாகம் சார்பில் அளிக்கப்பட்ட புகார்கள் உள்ளிட்டவைகளை சிபிசிஐடி போலீசாரிடம் பழநி அடிவாரம் போலீசார் நேற்று ஒப்படைத்தனர். இதனைத்தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் மேற்கண்ட 4 பேர் மீதும், அதே 7 பிரிவுகளில் வழக்கு பதிந்து விசாரணையை துவக்கினர். வழக்கு விவரங்கள் குறித்து அடிவாரம் போலீசாருடன் தீவிர ஆலோசனை நடத்தினர்.

இதனைத்தொடர்ந்து நேற்று பிற்பகல் சிபிசிஐடி போலீசார் பழநி சார்பதிவாளர் அலுவலகம் வந்தனர். சஸ்பெண்ட் செய்யப்பட்ட சசிகலாவிற்கு பதிலாக மாற்று அதிகாரி நியமிக்கப்படாததால் மாவட்ட பதிவாளர் (தணிக்கை) செல்வக்குமார் உள்ளிட்டோரிடம் பதிவு ஆவணங்கள், கோயில் நிர்வாகம் சார்பில் பத்திரப்பதிவு செய்ய வேண்டாமென வலியுறுத்தி வழங்கப்பட்ட கடிதங்கள் குறித்து கேட்டறிந்தனர். தொடர்ந்து நேற்று மாலை பழநி கோயில் தலைமை அலுவலகத்தில் டிஎஸ்பி அஜய் தங்கம் தலைமையிலான 15க்கும் மேற்பட்ட சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அங்குள்ள நிலங்கள் பிரிவுக்கு சென்று, பிரச்னைக்குரிய நிலத்தின் ஆவணங்களை பெற்றனர். தொடர்ந்து நிலம் தொடர்பாக, கோயில் சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கு விவரங்கள், மேல்முறையீட்டு ஆவணங்களை பெற்றுக்கொண்டனர். மேலும் பிரச்னைக்குரிய நிலத்தின் அமைவிடம், எல்லைகள், இடத்தின் சந்தை மதிப்பீடு குறித்து ஆய்வு செய்தனர். பின்னர் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு கூடுதல் ஆவணங்களை பெறுவதற்காக சென்றனர்.

திண்டுக்கல் எஸ்பி ஜெயக்குமாரிடமும், சிபிசிஐடி போலீசார் ஆலோசனை நடத்தினர். முதற்கட்டமாக நிலம் தொடர்பான விவரங்களை அறிந்து கொண்டு, அதன் பின்னர் சாட்சிகள் மற்றும் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க உள்ளனர். பழநியில் 3 நாட்கள் தங்கி சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொள்ளவுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த சிபிசிஐடி எஸ்பி ஷாஜிதா, பழநி வரவுள்ளதாக சிபிசிஐடி வட்டாரங்கள் தெரிவித்தன.

* 3 பேர் கொண்ட விசாரணை குழு
பழநி கோயில் நிலம் முறைகேடாக பத்திரப்பதிவு செய்தது தொடர்பாக முழுமையாக ஆய்வு செய்து உண்மை நிலையை அறிய கூடுதல் பதிவுத்தலைவர், உதவி பதிவுத்தலைவர், மாவட்ட பதிவாளர் அடங்கிய விசாரணைக்குழுவை அமைத்து பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த குழு, பத்திரப்பதிவு நடந்த நாளில் சார்பதிவாளர் அலுவலக சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்யும். பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட சார்பதிவாளர், விடுப்பில் சென்ற சார்பதிவாளர், உதவியாளர், சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாவட்ட பதிவாளரிடமும் இந்த குழு விசாரணை நடத்த உள்ளது.

Related Stories: