சென்னை: ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி, துறை ரீதியிலான விசாரணையை எதிர்கொண்டுள்ள பதிவுத்துறை டி.ஐ.ஜி.க்கு கூடுதல் ஐ.ஜி.யாக பதவி உயர்வு வழங்க அரசு மறுத்தது சரி எனவும், கறைபடியாத அதிகாரிகளுக்கு மட்டுமே பதவி உயர்வு வழங்க வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பதிவுத்துறையில் கூடுதல் ஐ.ஜி.யாக பதவி உயர்வு வழங்குவதற்கான பட்டியல் தயாரிக்கப்பட்டது.
இந்த பட்டியலில் இடம்பெற்றிருந்த டி.ஐ.ஜி. ஆனந்துக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு கூறப்பட்டது. அவருக்கு எதிராக துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டதால் பதவி உயர்வு வழங்கப்படவில்லை. இதை எதிர்த்து ஆனந்த் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, துறை ரீதியிலான நடவடிக்கைக்கு முன்பே தயாரிக்கப்பட்ட பதவி உயர்வு பட்டியலில் மனுதாரர் பெயர் இடம் பெற்றிருந்ததால் அவருக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து, தமிழக அரசுத்தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், பதவி உயர்வுக்கான பட்டியலில் பெயர் இடம்பெற்றுள்ளது என்பதற்காக பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று எவரும் உரிமையாக கோர முடியாது. எனவே, தனி நீதிபதி உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. கறைபடியாத அதிகாரிகளுக்கு மட்டுமே பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
