மதுரை: பஞ்சாப் மாநிலம், சண்டிகரில் இருந்து மதுரைக்கு எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் மாலை 4 மணியளவில் வந்தது. அந்த ரயிலில் ரயில்வே போலீசார் மற்றும் போதைப்பொருள் தடுப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ரயிலின் பொதுப்பெட்டியில் இருந்து இறங்கிய நபர், சந்தேகத்திற்கிடமான முறையில் நடை மேடையில் நடந்து சென்றார். பாதுகாப்பு படை மோப்ப நாய் எரிக், அவரது டிராலி சூட்கேசை சுற்றி சுற்றி வந்தது.
உடனே போலீசார், அவரது பை மற்றும் சூட்கேஸ் ஆகியவற்றை பறிமுதல் செய்து சோதனையிட்டனர். அதில் சுமார் 20 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.10 லட்சம்.அவர் ஆந்திரா ஸ்ரீகாகுளம் பகுதியை சேர்ந்த தர்க்கேஸ்வர் பரிகி(35) என தெரிய வந்தது. அவரை கைது செய்து ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
