சேலம்:பாமக நிறுவனர் ராமதாசுக்கு ஆதரவாக செயல்பட்டு அதிருப்தியில் உள்ள நிர்வாகிகள் கூட்டம், சேலம் மேற்கு தொகுதி முன்னாள் எம்எல்ஏ அருள் தலைமையில், சேலத்தில் நேற்று நடந்தது. இதில் பல மாவட்டங்களில் இருந்தும் ராமதாஸ் ஆதரவு பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர். அவர்கள் கூட்டத்தில் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். இதுகுறித்து முன்னாள் எம்எல்ஏ அருள் அளித்த பேட்டி: ராமதாசுடன் இருந்தவர்கள் யாருமே அன்புமணியின் தலைமையை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை.
இனிமேலும் அன்புமணியை தலைவராக ஏற்க முடியாது. வன்னியர்களை வைத்து பிழைப்பு நடத்தி கொண்டு இருக்கும் அன்புமணியை தமிழக மக்கள் புறக்கணிக்க வேண்டும். இதை ஒரு வேண்டுகோளாகவே வைக்கிறோம். ராமதாஸ் உடன் நான் இருந்ததால் அன்புமணி என்னை துரோகி, சாக்கடை என்று கூறினார். எத்தனையோ சோதனையான சூழலில் உயிரை பணையம் வைத்து அன்புமணியை காப்பாற்றினேன்.
ராமதாஸ் அரசியல் துறவறம் பூண்டதால், இந்த மாதிரியான ஒரு கூட்டத்தை கூட்டியுள்ளோம். இந்த கூட்டத்தில் நானும் ஒரு பார்வையாளராக கலந்துகொண்டுள்ளேன். இதில் எடுக்கப்பட்ட முடிவை விரைவில் அறிவிப்போம். ஆடி மாதம் என்பதால் இப்போதைக்கு முடிவு அறிவிக்கவில்லை. பொறுப்பாளர்கள் ஒரு சீட்டில் அவர்களின் கருத்தை எழுதிக்கொடுத்துள்ளனர். அதை ஆய்வு செய்து விரைவில் அறிவிப்போம். அன்புமணியுடன் செல்ல விருப்பம் இல்லாத நிர்வாகிகள் மட்டுமே இங்கு வந்துள்ளனர்.
காடுவெட்டி குரு படத்தையும், காரல்மார்க்ஸ், பெரியார், அம்பேத்கர் படத்தையும் பயன்படுத்தினோம்.
அன்புமணியை கண்டு வன்னியர்கள் ஏமாறக்கூடாது. எடப்பாடி பழனிசாமியின் மனச்சாட்சியான இளங்கோவன் எனக்கு போன் செய்து, அதிமுகவில் சேருங்கள் என்று அழைத்தார். தவெகவில் சேருவதற்கு சிலர் முயற்சி செய்தனர். அன்புமணி அதை தடுத்து நிறுத்தினார். இன்னும் திருமாவளவன் மட்டும் தான் என்னிடம் பேசவில்லை. பல கட்சியினர் அழைத்துள்ளனர். அவர்களுடன் போகலாமா? புதிய கட்சியை தொடங்கலாமா? என்று யோசிக்கிறோம். மொத்தத்தில் அன்புமணிக்கு டாட்டா, குட்பை. இவ்வாறு அருள் கூறினார்.
