திருட்டு வழக்கு ஆய்விற்காக மலையேறிய எஸ்ஐ சாவு

பழநி: தேனி மாவட்டம், அரண்மனைபுதூரைச் சேர்ந்தவர் விக்னேஷ் (33). திண்டுக்கல் மாவட்ட தடயவியல் துறையில் கைரேகை பிரிவில் எஸ்ஐயாக பணிபுரிந்து வந்தார். இவருக்கு மனைவி, 4 வயதில் மகன், 6 மாதத்தில் மகள் உள்ளனர்.

நேற்று, பழநி அருகே ஐவர் மலையில் உள்ள திரவுபதி அம்மன் சன்னதியில் 20 கிராம் வெள்ளி மற்றும் 4 கிராம் தங்கம் இருந்த தாலிக்கொடி திருடப்பட்டது. சுமார் 200 படிகள் கொண்ட ஐவர் மலை உச்சியில் உள்ள திரவுபதி அம்மன் சன்னதிக்கு கைரேகை பதிவு செய்வதற்காக நேற்று, விக்னேஷ், சக போலீஸ் அதிகாரிகளுடன் மலையேறினார். பாதி வழி சென்றபோது திடீரென மயங்கி விழுந்தார்.

உடன் சென்ற போலீசார் விக்னேஷை மீட்டு, பாப்பம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சைக்கு பின் மேல் சிகிச்சைக்காக பழநி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து திண்டுக்கல் எஸ்பி ஜெயக்குமார் உள்ளிட்டோர் விக்னேஷின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

Related Stories: