கோவையில் உட்கட்சி பூசலால் பயங்கர மோதல்: பெண் நிர்வாகியை தாக்கி ஆடையை கிழித்த தவெக எம்எல்ஏ ஆதரவாளர்கள்

சூலூர்: கோவை அருகே எம்எல்ஏவுக்கு மாலை அணிவிக்க சென்ற தவெக பெண் நிர்வாகியை ஆடையை கிழித்து தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை மாவட்டம், சூலூர் தவெகவினர் கிழக்கு மாவட்ட செயலாளர் பாபு. சூலூர் தவெக எம்எல்ஏ சுகுமார். தேர்தலுக்கு ஒரு மாதத்திற்கு முன்புதான் மாற்று கட்சியில் இருந்து விலகி சுகுமார் தவெகவில் இணைந்தார். பின்னர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, தேர்தலில் வெற்றி பெற்றார். அதுமுதல் மாவட்ட செயலாளர் பாபுவை மதிப்பதில்லை.

எந்த நிகழ்ச்சிகளுக்கும் அழைப்பது இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதனால், இருவரும் தனித்தனிஅணியாக கட்சி பணிகளில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், சூலூர் எம்எல்ஏ சுகுமார் தலைமையில், கருமத்தம்பட்டியை அடுத்த கணியூர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பு கூட்டம் நடைபெற்றது. இதற்காக, கணியூர் வந்த எம்எல்ஏ சுகுமாருக்கு மாவட்ட செயலாளர் பாபு தலைமையிலான ஒரு பிரிவினர் மாலை அணிவிக்க சென்றனர். இதில், அக்கட்சியின் ஊராட்சி செயலாளர் வசந்தியும் ஒருவர்.

அவரை, எம்எல்ஏ தரப்பு நிர்வாகிகள் தடுத்து நிறுத்தி, மாலை அணிவிக்க விடாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அத்துடன், கைகளால் பயங்கரமாக தாக்கி, அவரது ஆடையை கிழித்தனர். இதில் காயமடைந்த பெண் நிர்வாகி வசந்தியை கட்சியினர் கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தவெகவில் கடந்த 2 ஆண்டுகளாக பணியாற்றி, தேர்தல் பணியிலும் ஈடுபட்ட பெண் நிர்வாகியை அக்கட்சியினரே, எம்எல்ஏ முன்னிலையில் தாக்கி, ஆடையை கிழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து, காயம் அடைந்த தவெக நிர்வாகி வசந்தி கூறியதாவது:எங்கள் பகுதிக்கு வந்த எம்எல்ஏ சுகுமாருக்கு மாலை அணிவிக்க சென்றபோது, எம்எல்ஏவின் அடியாட்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் என்னை தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வடக்கு ஒன்றியச் செயலாளர் அஸ்வின் மற்றும் செந்தில் ஆகியோர் என்னை வலுக்கட்டாயமாகப் பிடித்துத்தள்ளி கழுத்தை நெரித்து தாக்கினர்.

மோதலில் எனது ஆடை கிழிக்கப்பட்டதோடு, ஆபாசமான வார்த்தைகளால் திட்டிய எம்எல்ஏ சுகுமாரின் அடியாட்கள் மற்றும் புதிதாக அவருடன் தற்போது கூட்டு சேர்ந்துள்ள மாற்றுக்கட்சி நிர்வாகிகள் எனக்கு, கொலை மிரட்டல் விடுத்தனர். கட்சிக்காக உழைத்த பெண் நிர்வாகி என்றும் கூட பாராமல் ஆடையை கிழித்து தாக்கிய எம்எல்ஏ ஆதரவாளர்கள் மீது தலைவர் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கண்ணீர் மல்க கூறினார்.

* `நான்தான் மாவட்ட செயலாளர்’ புஸ்ஸியே சொல்லிட்டாரு: எம்எல்ஏ சுகுமார் பேட்டி
சூலூர் தொகுதி எம்எல்ஏ சுகுமார் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், நன்றி அறிவிப்பு கூட்டத்தில் வசந்தி என்ற பெண் தாக்கப்பட்டது எனக்கு இரவு 12 மணிக்கு மேல்தான் தெரியவந்தது. நான் இருக்கும்போது எதுவும் நடைபெறவில்லை. வசந்தியிடம் போனில் பேசினேன். கோவை கிழக்கு மாவட்ட தவெகவுக்கு நான்தான் மாவட்ட செயலாளர்.

இதை, கட்சியின் மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஏற்கனவே கூறி விட்டார். அந்தந்த தொகுதியில் வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள்தான் மாவட்ட செயலாளர்கள். விரைவில் இதற்கான அறிவிப்பு வரும். முன்பிருந்த மாவட்ட செயலாளரை யாருக்கும் பிடிக்காததால், பிளக்ஸ் போர்டு அடிக்கும்போது அவரது படத்தை தவிர்த்து விடுகிறார்கள். இதற்கு, நான் ஒன்றும் செய்ய முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: