காலே: இலங்கை யு19 அணியுடனான முதலாவது இளைஞர் டெஸ்ட் போட்டியில், இந்தியா யு19 அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட் இழப்புக்கு 378 ரன் குவித்து வலுவான நிலையில் உள்ளது. காலே சர்வதேச ஸ்டேடியத்தில் நடந்து வரும் இப்போட்டியில் (4 நாள் ஆட்டம்), டாஸ் வென்று பேட் செய்த இலங்கை யு19 அணி 9 விக்கெட் இழப்புக்கு 424 ரன் குவித்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. கெகுனகோடா 233 ரன் விளாசினார்.
அடுத்து களமிறங்கிய இந்தியா யு19 அணி 2ம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 186 ரன் எடுத்திருந்தது. லக்ஷியா ராய்சந்தானி 93, சாகர் விர்க் 87 ரன்னுடன் நேற்று 3ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். அபாரமாக விளையாடிய இருவரும் சதத்தை பூர்த்தி செய்ததுடன் முதல் விக்கெட்டுக்கு 295 ரன் சேர்த்து அசத்தினர். சாகர் 134 ரன்னில் (312 பந்து, 15 பவுண்டரி, 1 சிக்சர்) வெளியேற, அடுத்து வந்த குஷ்கரா ஓஜா 24, கேப்டன் யஷ்பர்தன் சவுகான் 6 ரன்னில் பெவிலியன் திரும்பினர்.
மழை காரணமாக ஆட்டம் பாதிக்கப்பட்ட நிலையில், 3ம் நாள் முடிவில் இந்தியா யு19 அணி 3 விக்கெட் இழப்புக்கு 378 ரன் குவித்துள்ளது. லக்ஷியா 196 ரன் (306 பந்து, 21 பவுண்டரி, 3 சிக்சர்), குஷ் படேல் 3 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இந்தியா யு19 அணி இன்னும் 46 ரன் மட்டுமே பின்தங்கியுள்ள நிலையில் இன்று கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது.
