சென்னை: உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், மூன்றாம் பாலினத்தவர்களை சமூக, கல்வி ரீதியாக பின்தங்கியவர்களாகவும், சிறப்பு பிரிவினாராகவும் கருதி, பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தோர் உள்ளிட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு வழங்காமல் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 2024ம் ஆண்டு ஜூன் மாதம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. இந்த மேல்முறையீட்டு வழக்குடன், மூன்றாம் பாலினத்தவருக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கக் கோரி தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்குகளும் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தன.
அப்போது, கர்நாடகாவில் சிவில் சர்வீசஸ் மற்றும் அரசு வேலைவாய்ப்பில் ஒரு சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. அதே நடைமுறையை தமிழக்கத்திலும் பின்பற்றலாம் என்று மூன்றாம் பாலினத்தவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழகத்தில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு சிவில் சர்வீஸ் மற்றும் அரசு வேலைவாய்ப்பில் ஒன்று அல்லது இரண்டு சதவீதம் தனி இட ஒதுக்கீடு வழங்கப்படுமா என்பது குறித்து ஆகஸ்ட் 4ம் தேதிக்குள் விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.
