நாமக்கல், ஜூலை 14: நாமக்கல்லில் நடந்த மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் 852 மனுக்கள் குவிந்தன. இதில், 3 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் மதுபாலன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடனுதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 852 மனுக்களை கலெக்டரிடம் வழங்கினர். மனுக்களைப் பெற்று கொண்ட கலெக்டர், உரிய அலுவலர்களிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டார்.
தொடர்ந்து, கலெக்டர் மதுபாலன், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 3 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.9,855 மதிப்பில் காதொலி கருவிகளை வழங்கினார். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் (சிப்காட்) கண்ணன், உதவி ஆணையர் (கலால்) ராஜேஷ்குமார், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கலைசெல்வி உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
