நாமக்கல், ஜூலை 10: தேசிய வேளாண் உட்கட்டமைப்பு திட்டத்தில், நாமக்கல் மாவட்டத்திற்கு ரூ.32 கோடி கடன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் மதுபாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: உழவர்கள் உற்பத்தி செய்யும் விளைபொருட்களை, தேவையான நேரத்தில் நல்ல விலையில் விற்று, வேளாண் உற்பத்தியை அடுத்த நிலைக்கு எடுத்து செல்ல, வேளாண் உட்கட்டமைப்பு வசதிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. குறிப்பாக அறுவடைக்கு பிந்தைய காலங்களில் இழப்பை குறைக்கவும், உபரி விளைபொருளை மதிப்பு கூட்டி விவசாயிகளுக்கு லாபகரமான விலை கிடைக்கவும், வேளாண் உட்கட்டமைப்பு வசதிகள் இன்றியமையாத அமைகிறது.
இவற்றை கருத்தில் கொண்டு, வேளாண் உட்கட்டமைப்புகளை மேம்படுத்த, மத்திய அரசு வேளாண் உட்கட்டமைப்பு நிதியை உருவாக்கியுள்ளது. இந்த நிதி திட்டத்தின் கீழ் 3 சதவீதம் வட்டி மானியம் மற்றும் கடன் உத்தரவாதம் வழங்கப்படுகிறது. அதன்படி, 2026-27ம் நிதி ஆண்டிற்கு இந்ததிட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்டத்திற்கு ரூ.32 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அரசின் மற்ற திட்டங்களில் மானியம் பெறும் விவசாயிகளும் இத்திட்டத்தில் பயன் பெறலாம். விவசாய தொழில் முனைவோர், விவசாய குழுக்கள், சுய உதவி குழுக்கள், கூட்டு பொறுப்பு குழுக்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், கூட்டுறவு விற்பனை சங்கங்கள், பல்நோக்கு கூட்டுறவு சங்கங்கள், கூட்டமைப்புகள், புது நிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் போன்ற அமைப்புகள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்.
