×

அதிமுகவிலிருந்து வருபவர்களை சேர்க்கும் நீயே ஒரு களவாணி நீ என்ன யோக்கியனா?.. விஜய்க்கு செல்லூர் ராஜூ கேள்வி

 

மதுரை: அதிமுகவிலிருந்து வருபவர்களை சேர்க்கும் நீ என்ன யோக்கியனா என முதல்வர் விஜய்க்கு செல்லூர் ராஜூ சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார். மதுரை பெத்தானியாபுரம் பகுதியில் அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. அதிமுக மாஜி அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, உதயகுமார், முன்னாள் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் செல்லூர் ராஜூ பேசியதாவது: இந்த ஆட்சி எப்போது போகும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு. கட்சியை விட்டு செல்வோர் குறித்து அதிமுக என்றும் கவலைப்படாது. இந்த கட்சியை நம்பாமல் ஓடுபவன் ஓடுகாலி. அவனைப்பற்றி பேசி நேரத்தைப் போக்க வேண்டியதில்லை. மக்கள் நலனுக்கு எதுவுமே செய்யாத தவெகவிற்கு வாக்களித்து, அவர்கள் சட்டமன்றம் சென்றதும் என்ன பேசுகிறோம் என்று அவர்களுக்கே தெரியவில்லை. வாயில் வருவதை எல்லாம் பேசுபவன் தலைவன் கிடையாது.

முதல்வர் விஜய், இளைய தலைமுறையையே பாழ்படுத்திக் கொண்டிருக்கிறார். ஒரு நடிகராக பேசுவது வேறு, சட்டமன்றத்தில் பேசுவது நாகரிகமாகத்தான் பேச வேண்டும். பெருந்தலைவர்கள் அமர்ந்த இருக்கை. இப்படி யாரும் பேசி இருக்கிறார்களா? சைகை காண்பிப்பது? என்னங்கடா இது? சட்டமன்றத்தை தற்போது சந்தைக்கடை ஆக்கிட்டாங்க. தமிழ்நாடு முதல்வரே. நீங்கள் என்ன பரம யோக்கியனா? உங்களை பார்த்து கைநீட்டி பேசுகிறேன். நீ யோக்கியமானவன் என்று சொல்ல முடியுமா? ஒரு படத்திற்கு எவ்வளவு வாங்கினாய்? வெளியே சொல்லி இருக்கிறாயா? நீயே ஒரு களவாணி. அடுத்தவரை களவாணி எனச் சொல்வதற்கு என்ன யோக்கியதை இருக்கிறது? திரைப்படத்தில் வரி ஏய்ப்பு, வெளிநாட்டிலிருந்து மோசடியாக இறக்குமதி செய்த சொகுசு கார். நீ யோக்கியமானவனா? 41 பேருக்கு அரசாங்க பதவியை தூக்கிக் கொடுத்திருக்கீங்க.

இதற்கு முன்பு பத்து பேர் இறந்திருக்காங்களே? அவங்க குடும்பம் என்ன பாவம் செஞ்சாங்க?. இயற்கை பேரிடர், சாலை விபத்தில் இறப்பவர்களுக்கு அரசு வேலை கொடுப்பீர்களா? அரை முட்டாள்தனமாக, அரை வேக்காட்டுத்தனமாக செய்து விட்டு, ஓடு ஓடு என்று சொல்லும் நீதான் முதலில் ஓட வேண்டும். அரசியலை விட்டே நீதான் ஓட வேண்டும். ஓடுற காலம் வரும் விஜய். அதிமுகவிலிருந்து வருபவர்களை சேர்க்கும் நீ என்ன யோக்கியனா? வர்றவங்களும் யோக்கியர்களா? அவர்கள் மீது வழக்கு இல்லையா? எங்கள் பல்லைக் குத்தி மோந்து பார்க்க விரும்பலை. இப்பவே கோட்டையில் கமிஷன் வாங்க ஆரம்பித்து விட்டார்கள் என்கின்றனர். இந்தப் பதவி நாளையே போய்விடும். விஜய் கவர்ச்சியானவரா? ஒருமுறை பார்த்தால் மறுமுறை பார்க்க முடியாது. எம்ஜிஆர், ஜெயலலிதாவை மீண்டும் மீண்டும் பார்த்துக் கொண்டே இருக்கலாம். இவ்வாறு பேசினார்.

Tags : AIADMK ,Sellur Raju ,Vijay ,Madurai ,Chief Minister ,Anna Trade Union Council ,Bethaniyapuram ,
× RELATED ஜெயக்குமாரின் குட்டி ஸ்டோரி..! வெயில்...