திருப்பரங்குன்றம்: கழுதை தேய்ந்து கட்டெறும் பானது அதிமுகதான் அதிமுகதான் என எடப்பாடி பழனிசாமிக்கு மாணிக்கம் தாகூர் எம்பி பதிலடி கொடுத்துள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரும், விருதுநகர் எம்பியுமான மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் தள பதிவில், ‘கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை யாருக்குப் பொருந்துமோ இல்லையோ, இரட்டை இலையை வைத்துக் கொண்டே டெபாசிட் இழந்து வரும் அதிமுகவுக்கு மிகக் கச்சிதமாகப் பொருந்தும். மத்தியில் பாஜவுக்கு அடிமையாக இருந்துவிட்டு, இப்போது கொள்கை பேசும் பழனிசாமியின் இரட்டை வேடத்தை மக்கள் அறிவார்கள். எங்களை விமர்சிப்பதை விட்டுவிட்டு, உங்கள் கட்சியை முதலில் காப்பாற்றிக் கொள்ளுங்கள் எடப்பாடியாரே’ எனத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற பின்பு முதல்முறையாக மதுரை வந்த விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூருக்கு மதுரை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது: வரும் நாடாளுமன்ற தேர்தல் மிக முக்கியமானது. இந்த தேர்தலில் ராகுல் காந்தியை பிரதமராக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு மட்டுமே எங்களின் செயல் திட்டம் இருக்கும். பாஜ, ஆர்.எஸ்.எஸ்காரர்கள் ராமர் கோயில் உண்டியலில் கையை வைத்து விட்டார்கள். பாஜவினர் உண்டியல் களவாணிகள் என்பது தெரிந்துள்ளது. ஆர்.எஸ்.எஸ்காரர்கள் கோயில் காசை திருடித்தான் அரசியல் செய்கிறார்கள் என்பது வெளியே வந்துவிட்டது. பிடிபட்ட திருடர்கள் விழி பிதுங்கி நிற்கிறார்கள.
ஆனால் பிரதமர் மோடி இதைப்பற்றி வாயை திறக்கவே இல்லை. ராமர் கோயிலில் திருட்டு நடந்திருப்பதை, பாஜவினர் வாய் திறக்காதவர்கள் குறித்து நாடாளுமன்றத்தில் நிச்சயம் பேசுவோம். ராமருக்கே நீதி வாங்கும் நிலையில் இருக்கிறோம். பாஜவிற்கு எல்லாமே வியாபாரம், பணம், வசூல் தான். இது தான் அவர்களின் வழக்கம். இவ்வாறு கூறினார்.
‘முதல்ல அதிமுகவ ஒன்னு சேருங்க’
“டிடிவி.தினகரனை பொறுத்த அளவில் எல்லாத்தையும் ஒருங்கிணைக்கும் வேலையை பார்க்கிறார். அதிமுகவை ஒன்றுமில்லாமல் ஆக்கிய பொறுப்பும் அவருக்குத்தான் சேரும். இதே கருத்தை அவர் அதிமுகவை ஒருங்கிணைக்க பண்ணியிருக்கலாம். எம்ஜிஆர் தொடங்கி ஜெயலலிதா காப்பாற்றிய கட்சி இந்த சூழலுக்கு வந்திருக்காது. அவர் செய்த வேலை தான் 17 பேரை தெருவில் நிறுத்தி, அதிமுகவை அழிவின் பாதைக்கு அழைத்துச் சென்றது. அவர் முதலில் அதிமுகவை ஒருங்கிணைக்க பார்க்கட்டும்” என்று மாணிக்கம் தாகூர் கூறினார்.
