*சிபிஎம்எல் கட்சியினர் எச்சரிக்கை
தஞ்சாவூர் : மேகதாதுவில் கர்நாடகா அரசு அணை கட்டும் முயற்சிகளை ஒன்றிய – தமிழ்நாடு அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி சிபிஎம்எல் மக்கள் விடுதலை கட்சியினர் தஞ்சையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாவில் அணைக்கட்டும் முயற்சிகளை ஒன்றிய- தமிழ்நாடு அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஎம்எல் மக்கள் விடுதலைக் கட்சி சார்பில் தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஜனநாயக விவசாயிகள் சங்கத்தின் மாநில அமைப்பாளர் கந்தசாமி, விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநில அமைப்பாளர் ராமர் ஆகியோர் தலைமை வகித்தனர்.
சிபிஎம்எல் மக்கள் விடுதலை கட்சியின் தஞ்சை மாவட்ட செயலாளர் உமாபதி, துணைச் செயலாளர் செந்தில்குமார், புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் வீரக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தினை கட்சியின் சேர்மன் ஜெய.சிதம்பர நாதன் தொடங்கி வைத்து உரையாற்றினார். மாநில பொதுச் செயலாளர் விடுதலைக் குமரன் கண்டன ஆர்ப்பாட்டத்தினை நிறைவு செய்து உரையாற்றினார்.
கண்டன ஆர்ப்பாட்டத்தில் கர்நாடக அரசு மேகதாதுவில் ஆற்றின் குறுக்கே அணைகட்டினால் தமிழ்நாட்டில் காவிரி டெல்டாவில் சுமார் 15 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் நடைபெற்று வரும் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்படும். டெல்டா பாலைவனமாகும். விவசாயம் அழிந்து போகும்.
மேலும் தமிழ்நாட்டில் 32 மாவட்டங்களில் குடிதண்ணீர் தேவையை பூர்த்தி செய்வது பாதிக்கப்படும். தமிழ்நாட்டில் தண்ணீர் பஞ்சம் தலை விரித்தாடும். எனவே எக்காரணம் கொண்டும் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு எடுக்கும் முயற்சிகளை ஒன்றிய மாநில அரசுகள் தடுத்து நடத்த வேண்டும்.
கர்நாடக அரசு அணையை கட்டியே தீருவோம் என்று அடம் பிடித்து வரும் நிலையில், ஒன்றிய பாஜக அரசு எந்த பதிலும் சொல்லாது மவுனம் காத்து வருவது சந்தேகத்தை எழுப்புகிறது. தமிழ்நாடு அரசு கவனமாக மேகதாது பிரச்சினையை கையாண்டு அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.
தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் கால வாக்குறுதி அடிப்படையில் விவசாயிகளின் அனைத்து விதமான கடன்களையும் எவ்வித நிபந்தனையும் இன்றி உடனடியாக ரத்து செய்ய வேண்டும். குறுவை சாகுபடி இல்லாது வாழ்வாதாரம் இழந்துள்ள விவசாய தொழிலாளர்களுக்கு ரூ.15,000ம் நிவாரணம் வழங்க வேண்டும். ஜூன் 12 காவிரியில் தண்ணீர் திறக்கப்படாததால் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் முழுமையான நிவாரணத்தை வழங்க வேண்டும்.
மேகதாதுவின் பிரச்சனைக்கு அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்டி ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றி ஒன்றிய பிரதமரை சந்தித்து பேசி அணை கட்டுவது தடுத்து நிறுத்த வேண்டும். காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி ஜூன், ஜூலை மாதத்திற்கு உரிய அளவு தண்ணீரை பெறும் முயற்சிகளை தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் உலகத் தமிழர் பேரமைப்பின் துணைத் தலைவர் அய்யனாபுரம் முருகேசன், மக்கள் அதிகாரம் மூத்த தலைவர் காளியப்பன், இடதுசாரிகள் பொதுமேடை ஒருங்கிணைப்பாளர் துரை.மதிவாணன், தமிழ்நாடு மக்கள் விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் தங்க.குமரவேல் பொருளாளர் மொழியமுதன், இயற்கை வேளாண் விஞ்ஞானி முத்துமுருகன், பொறியாளர் துரை.அசோகன், எழுத்தாளர் சாம்பான், சமூக ஆர்வலர் சாமி.கரிகாலன், சிபிஎம்எல் மக்கள் விடுதலை கட்சியின் மையக் குழு நிர்வாகி அருண்குமார், தஞ்சை மாவட்ட கமிட்டி உறுப்பினர்கள் இந்திரஜித், ராஜேந்திரன், சங்கர், மதியழகன், அன்பரசன், தேவதாஸ், துரைக்கண்ணு, முகேஷ், செம்மலர் செல்வி, புவனேஸ்வரி, முருகபாண்டியன், கண்ணையன், பாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
